சென்னையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளைக்கு சொந்தமான சுமார் 20ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் சோனியா காந்திக்கு கைகளுக்கு சென்றது எப்படி என்று ஆடிட்டர் குருமூர்த்தி பரபரப்பு தகவல்கள் வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சொத்துகளை நிர்வகிக்க மற்றும் அந்த சொத்துகள் மூலம் கிடைக்கும் வருமானத்தை கல்வி உள்ளிட்ட சமூகப்பணிகளுக்கு செலவிட உருவாக்கப்பட்டது தான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளை. இந்த அறக்கட்டளைக்கு சொந்தமாக சென்னை தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான சொத்துகள் உள்ளன. உதாரணத்திற்கு சென்னை காமராஜர் அரங்கம் காங்கிரஸ் அறக்கட்டளைக்கு சொந்தமானது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமை இடமான சத்தியமூர்த்தி பவன் கூட அறக்கட்டளைக்கு சொந்தமானது தான்.

இப்படி ஏராளமான கட்டிடங்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு சென்னையில் உள்ளன. மேலும் பல ஏக்கர் நிலங்களும் இருக்கின்றன. இவற்றை வாடகைக்கும், குத்தகைக்கும் விட்டு அறக்கட்டளை வருமானம் ஈட்டி வருகிறது. இந்த வருமானத்தை சமூக பணிகளுக்கு செலவிட வேண்டும் என்பது தான் அறக்கட்டளையின் பைலா கூறுகிறது. ஆனால் இதில் ஏராளமான முறைகேடுகள் நடைபெறுவதாக ஏற்கனவே பல்வேறு புகார்கள் உள்ளன. அறக்கட்டளைக்கு சொந்தமான கட்டிடங்களில் செயல்படும் வணிக நிறுவனங்கள் கொடுக்கும் வாடகை தொகை முழுவதுமாக அறக்கட்டளைக்கு வருவதில்லை என்கிற புகாரும் உண்டு.

இது தொடர்பாக பெண் காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் அளித்த புகார் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் தேனாம்பேட்டையில் உள்ள காங்கிரஸ் அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தில் பிரமாண்ட வணிக வளாகம் அல்லது நட்சத்திர ஓட்டல் போன்ற ஒரு அமைப்பு கட்டுவதற்கான பணிகள் நடைபெறுவதாக  தகவல் வெளியானது. இது குறித்து விசாரித்த போது மும்பையை சேர்ந்த கட்டிட கலை நிபுணர் ஒருவர் போட்டுக் கொடுத்த பிளாளின் படி சென்னையை சேர்ந்த பிரபல பில்டிங் நிறுவனம் ஒன்று அங்கு கட்டிட பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தம் செய்துள்ளதாக ஆடிட்டர் குருமூர்த்தி தகவல் வெளியிட்டார்.

மேலும் இது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளையின் பைலாவிற்கு எதிரானது என்றும் குருமூர்த்தி குற்றஞ்சாட்டியுள்ளார். கல்வி போன்ற சமூகப்பணிகளுக்கு மட்டுமே அறக்கட்டளை சொத்துகளை பயன்படுத்த வேண்டும்எ ன்கிற விதி உள்ள நிலையில் வணிக நோக்கத்திற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் இடத்தை தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு தாரை வார்க்க முயற்சிகள் நடைபெறுவதாகவும் புகார் எழுந்துள்ளது. இதற்கிடையே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் நிலத்தில் வணிக நிறுவனம் கட்டும் பணிகள் ராகுல் காந்தியின் உதவியாளர்களில் ஒருவர் கனிஷ்க் சிங் மேற்பார்வையில் நடைபெற உள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளையின் தலைவராக தற்போது கே.எஸ்.அழகிரி உள்ளார். மேலும் நிர்வாகிகளாக சுதர்சன நாச்சியப்பன் கேசவன் போன்றோர் உள்ளனர். ஆனால் இவர்களை விடுத்து இந்த பணிகளை ராகுலின் உதவியாளர் மேற்பார்வையில் நடத்த காரணம் என்ன என்கிற கேள்வி எழுந்தது. இதற்கு ஆடிட்டர் குருமூர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதில் கொடுத்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அறக்கட்டளை டிரஸ்டியாக மோதிலால் வோராவும் உள்ளார். அதாவது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளைக்கு வடநாட்டைச் சேர்ந்த ஒருவர் நிர்வாகி.

இது எப்படி சாத்தியமானது என்கிற கேள்வி எழுந்த போது ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கடந்த 2015ம் ஆண்டு வெளியிட்ட ஒரு அறிக்கை மூலம் பதில் கிடைக்கிறது. அதாவது சோனியா காந்தி தான் மோதிலால் வோராவை அறக்கட்டளை நிர்வாகியாக நியமித்துள்ளதாக அந்த அறிக்கையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அறக்கட்டளையின் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு எந்த உரிமையும் கிடையாது. தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளையின் நிர்வாகிகளை நியமிப்பது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழு உறுப்பினர்கள் தான். ஆனால் இங்கு சோனியா காந்தி எப்படி மோதிலால் வோரா மற்றும் கேசவனை நியமித்தார் என்று குருமூர்த்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் கடந்த 2009ம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி டிரஸ்டிகள் அனைவரையும் டெல்லிக்கு அழைத்து சோனியா, அறக்கட்டளை ஆவணங்கள் பலவற்றில் கையெழுத்து பெற்றதாகவும் இது தொடர்பாக தன்னிடம் ஆதாரம் உள்ளதாகவும் குருமூர்த்தி தெரிவித்துள்ளார். மேலும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் நேசனல் ஹெரால்ட் பத்திரிகை சொத்துகளை சோனியா குடும்பம் எப்படி கபளீகரம் செய்ததோ அதே போல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சொத்துகளையும் சோனியா குடும்பம் ஸ்வாகா செய்துவிட்டதாகவும் புகார் கூறப்படுகிறது. ஆனால் இந்த விஷயத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தரப்பில் இருந்து சரியான ஆதாரங்களுடன் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. சோனியா காந்தி குடும்பமும் அமைதி காக்கிறது.

இந்த நிலையில் தான் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தில் கட்டுமானப்பணிகள் நடைபெற உள்ளது. அதுவும் ராகுலின் உதவியாளர் கனிஷ்க் சிங்கின் மேற்பார்வையில். அப்படி என்றால் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அறக்கட்டளை யாருடையை கட்டுப்பாட்டில் தற்போது உள்ளது என்பதை வெளிப்படையாகவே தெரிந்து கொள்ள முடிகிறது.