Asianet News TamilAsianet News Tamil

இதுதாங்க சரியான வாய்ப்பு.. ஊரடங்குக்குப் பிறகு நிரந்தரமா டாஸ்மாக்கை மூடுங்க.. ராமதாஸ் வழியில் பாஜகவும் வாய்ஸ்!

கெட்டதிலும் ஒரு நல்லது என்பதைப் போல, கொரோனா வைரஸ் தாக்குதலைக் கட்டுப்படுத்துவதற்காக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு, மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவது சாத்தியமானது என்பதை நிரூபித்துள்ளது. கடந்த 32 நாட்களாக தமிழகத்தில் மதுக்கடைகள் மூடப்பட்ட நிலையில் யாருக்கும், எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடவில்லை. தமிழகத்தில் நாளையே முழு மதுவிலக்கு நடைமுறைப் படுத்தப்பட்டால்கூட மது இன்றி தமிழகம் மகிழ்ச்சியாக இருக்கும். அந்த வகையில் தமிழகத்தில் முழு மதுவிலக்கை ஏற்படுத்த கிடைத்திருக்கும் சிறந்த வாய்ப்பு இது. 

Tamil nadu Bjp Leader plea to shut tasmac after corona crisis
Author
Chennai, First Published Apr 28, 2020, 8:45 PM IST

தமிழகத்தில் முழு மதுவிலக்கை ஏற்படுத்த கிடைத்திருக்கும் சிறந்த வாய்ப்பு இது. இந்த உண்மையை தமிழக அரசு புரிந்து கொண்டு, ஊரடங்கிற்குப் பிறகு நிரந்தரமாக மதுவிலக்கை அமல் படுத்த முன்வர வேண்டும் என்று தமிழக பாஜக  தலைவர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார். 

Tamil nadu Bjp Leader plea to shut tasmac after corona crisis
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும்விதமாக மார்ச் 24 முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அப்போது முதலே தமிழகத்தில் டாஸ்மாக கடைகளும் மூடப்பட்டுகிடக்கின்றன. கடந்த 34 நாட்களாக டாஸ்மாக கடைகள் முடப்பட்டிருக்கும் நிலையில், இந்த நிலையை அப்படியே கொரோனா வைரஸ் காலத்துக்கு பிறகும் தொடர வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தொடர்ந்து கோரிக்கை விடுத்துவருகிறார். இந்நிலையில் ராமதாஸின் வழியில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகனும் டாஸ்மாக் கடையை அப்படியே மூடிவிடுமாறு வலியுறுத்தியுள்ளார்.

Tamil nadu Bjp Leader plea to shut tasmac after corona crisis
இது தொடர்பாக எல். முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இப்போது நாம் மிகவும் நெருக்கடியான ஒரு காலகட்டத்தை கடந்து கொண்டிருக்கிறோம். கொரோனா வைரஸ் பரவல் எந்தத் திசையை நோக்கி பயணிக்கிறது என்று தெரியாத கண்ணாமூச்சி ஆட்டத்தில் நாமும் காய் நகர்த்திக் கொண்டிருக்கிறோம். எல்லா இன்னல்களிலும் நன்மை விளைவது போல இந்த ஊரடங்கால் கிடைக்கப்பெற்ற நன்மைகளில் முக்கியமானது மது இல்லாத தமிழர்களாக நாம் மாறியிருப்பதுதான்.
மகாத்மா காந்தி இந்திய விடுதலைக்காக எந்த அளவுக்கு தீவிரமாக போராடினாரோ, அதே அளவு தீவிரத்துடன் மதுவிலக்குக்காகவும் போராடினார். 1930-ம் ஆண்டில் இந்தியாவில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி, நாடு தழுவிய போராட்டம் நடத்தினார். மதுவுக்கு எதிரான காந்திஜியின் போராட்டம் தமிழகத்தில் பெரும் புரட்சி ஏற்படுத்தியதை வரலாறு அறியும். 1937-ம் ஆண்டு ஜூலை மாதம் சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக பதவியேற்ற இராஜாஜி, அன்றைய ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தினார். பின்னர் வட ஆற்காடு, இன்றைய ஆந்திராவில் உள்ள சித்தூர், கடப்பா ஆகிய மாவட்டங்களுக்கு மதுவிலக்கை நீட்டித்தார். வருவாய் இழப்பை ஈடுகட்ட அப்போது அவர் விற்பனை வரியை அறிமுகப்படுத்தினார்.

Tamil nadu Bjp Leader plea to shut tasmac after corona crisis
இந்திய வரலாற்றில் ஒட்டுமொத்த சென்னை மாகாணத்திலும் மதுவிலக்கை கொண்டு வந்தவர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார். 1948-ம் ஆண்டில் அவர் மதுவிலக்கை கொண்டு வந்தபோது அரசுக்கு ரூ.18 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று அதிகாரிகள் கூறினார். ஆனால், ஆண்டுக்கு ரூ.81 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டாலும் பரவாயில்லை; அதற்காக மதுவிலக்கை கைவிட மாட்டேன் என்று உறுதிபட கூறினார். அப்போது அவர் கொண்டு வந்த மதுவிலக்குதான் 1971-ம் ஆண்டு வரை நடைமுறையில் இருந்தது. அந்த மதுவிலக்கைத்தான் 1971-ம் ஆண்டில் கலைஞர் கருணாநிதி அரசு நீக்கியது.
குறுகிய காலமே ஆட்சி செய்தாலும், இயக்கத்தின் சில மூத்த தலைவர்கள் வலியுறுத்திய போதும் அறிஞர் அண்ணா மதுவிலக்கை கைவிடவில்லை . ஆனால், அவருக்கு பிறகு முதல்வரான கலைஞர் கருணாநிதி, இராஜாஜி போன்றவர்களின் வேண்டுகோளையும் மீறி மதுவிலக்கை ரத்து செய்தார். வீடுதேடி வந்து கோரிக்கை வைத்த ராஜாஜியை, மகனுக்குத் தேர்தல் டிக்கெட் கேட்டு வந்தார் என பொதுவெளியில் மழுப்பி, ராஜாஜியை அவமரியாதை செய்தார் கருணாநிதி.தனிப்பட்ட வகையில் எம்.ஜி.ஆர். மதுவை எதிர்த்தார். தவறான கதாபாத்திரங்களில் நடிக்காத எம்.ஜி.ஆர். ஒளிவிளக்கு படத்தில் கையில் மதுவோடு நடிக்க வேண்டி வந்தபோது, அதில் மற்றொரு எம்.ஜி.ஆரை புகுத்தி, 'மதுவில் விழும் நேரம் நீ மிருகம்' எனக் காட்சிப்படுத்தினார்.

Tamil nadu Bjp Leader plea to shut tasmac after corona crisis
இன்று மது மனித மாண்பை கெடுத்துக் கொண்டிருக்கிறது. மதுவிற்கு அடிமையானவர்களால் குடும்ப மாண்பு சீரழிகிறது, குடும்பங்கள் சீரழிகின்றன. ஆண்மை பறிபோகிறது. தகுந்த தலைவன் இல்லாத குடும்பம் தத்தளிக்கிறது. பெண்கள் தங்கள் உழைப்பால் மட்டுமே குடும்பத்தை நடத்தும் அவல நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். குழந்தைகளின் படிப்பு கேள்விக்குறியாகிறது.அவர்கள் படிக்கும் வயதில் குழந்தைத் தொழிலாளியாக நிர்பந்தப்படுத்தப்படுகிறார்கள். பெரும்பாலான விபத்துகள், குடித்துவிட்டு வாகனம் ஓட்டும்போது நடைபெறுகிறது. பெரும்பாலான தகராறுகள் ஒருவர் குடிபோதையில் இருக்கும் போதுதான் நடைபெறுகிறது. சிறிய தகராறுகள் முதல் கொலைக் குற்றங்கள் வரை இதில் அடக்கம். இது சம்பந்தமாக எண்ணற்ற சம்பவங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
 அதுமட்டுமல்ல, தமிழகம் எங்கும் பரவி விட்ட குடியால், ஒருவர் குடிக்கு அறிமுகமாகும் வயதை 14 என்று சொல்கிறது ஒரு ஆய்வு. குடி பார்ட்டி கொடுக்காத திருமண மாப்பிள்ளை இல்லை. குடி பார்ட்டி இல்லாத கல்லூரி விடுமுறை இல்லை. சோஷியல் டிரிங்கிங் சகஜமாக ஆகிவிட்டது. ஐ.டி.நிறுவனங்களில் குடி சகஜமாக்கப்பட்டுள்ளது. கல்லூரி மாணவர்கள் என்ற நிலை மாறி, இன்று பள்ளி மாணவர், மாணவியர் குடிக்கு உள்ளாகி வருவதைப் பார்க்கிறோம். பள்ளி மாணவி குடித்துவிட்டு பரிட்சைக்கு வந்த காட்சியை பார்த்தோம். ஐந்து வயது குழந்தையை குடிக்க வைத்து கும்மாளம் போடும் காணொளியை பார்த்தோம். இந்த நிலை நீடித்தால் என்னவாகும் எதிர்காலத் தலைமுறை ?Tamil nadu Bjp Leader plea to shut tasmac after corona crisis
தமிழ்நாட்டில் கடந்த பல ஆண்டுகளாகவே மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழும்போதெல்லாம், நடைமுறைப்படுத்தினால் மதுவுக்கு அடிமையானவர்கள் பாதிக்கப்படுவர்; கள்ளச்சாராயம் பெருக்கெடுத்து ஓடும் என்றெல்லாம் கூறி மதுவிலக்கை நடைமுறைப்படுத்த மறுத்து விடுகிறார்கள் தமிழக ஆட்சியாளர்கள். ஆனால், கடந்த ஒரு மாத கால ஊரடங்கில் மது கிடைக்காதவர் யாரும் தற்கொலை செய்து கொள்ளவில்லை. மது இல்லாததால் மன நோய்க்கு யாரும் உள்ளாகவில்லை. உடல் தளர்ச்சியோ மனத் தளர்ச்சியோ வந்ததாக பெரிய சம்பவங்கள் ஏதும் இல்லை. மாறாக தாய்மார்கள் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள். 14 வயதில் மதுவுக்கு அடிமையானவர், இன்று மதுப்பழக்கத்தை விடுத்து, எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார், அவர் குடும்பம் எவ்வாறு மகிழ்ச்சியோடு இருக்கிறது என்று கூறுவதையும் நாம் கண்டு மகிழ்கிறோம். இன்று போல் இவர் என்றும் குடி இல்லாத மனிதராக இருக்க வேண்டும் என குடும்பத்தினர் விரும்புகிறார்கள். குழந்தைகள் மகிழ்கிறார்கள். நெருக்கடியான சூழலிலும் குடும்பம் குதுகலித்து இருக்கிறது.

Tamil nadu Bjp Leader plea to shut tasmac after corona crisis
கெட்டதிலும் ஒரு நல்லது என்பதைப் போல, கொரோனா வைரஸ் தாக்குதலைக் கட்டுப்படுத்துவதற்காக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு, மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவது சாத்தியமானது என்பதை நிரூபித்துள்ளது. கடந்த 32 நாட்களாக தமிழகத்தில் மதுக்கடைகள் மூடப்பட்ட நிலையில் யாருக்கும், எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடவில்லை. தமிழகத்தில் நாளையே முழு மதுவிலக்கு நடைமுறைப் படுத்தப்பட்டால்கூட மது இன்றி தமிழகம் மகிழ்ச்சியாக இருக்கும். அந்த வகையில் தமிழகத்தில் முழு மதுவிலக்கை ஏற்படுத்த கிடைத்திருக்கும் சிறந்த வாய்ப்பு இது. இந்த உண்மையை தமிழக அரசு புரிந்து கொண்டு, ஊரடங்கிற்குப் பிறகு நிரந்தரமாக மதுவிலக்கை அமல் படுத்த முன்வர வேண்டும் என தமிழகத்தின் அனைத்துத் தாய்மார்களின் சார்பில் தமிழக அரசை மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்.” என்று எல். முருகன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios