தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கோவை மாவட்டம் கிணத்துக்கிடவில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “பிரதமர் நரேந்திர மோடியின் விவசாயிகள் உதவித்தொகை திட்டத்தில் தமிழகத்தில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது. 13 மாவட்டங்களில் 5 லட்சம் விவசாயிகளுடைய கணக்கில் சுமார் 100 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக தெரிகிறது. இந்த முறைகேட்டின் பின்னணியில் உள்ளவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதமரின் திட்டம் உண்மையான விவசாயிகளுக்கு சென்று சேருவதை உறுதிசெய்ய வேண்டும்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள பாஜ தீவிரமாக தயாராகி வருகிறது. பாஜக தலைமையில் மூன்றாவது அணி எதுவும் தமிழகத்தில் அமையாது. தற்போதுள்ள அதிமுக கூட்டணியே தொடரும். திமுகவின் உட்கட்சியில் சத்தியவாணி முத்து முதல் இப்போது ஆ.ராஜா வரை பட்டியல் இனத்தவர்கள் முக்கிய பதவிகளுக்கு வர முடியாமல் இருக்கிறார்கள். பட்டியல் இனத்தவர்கள் புறக்கணிக்கப்படும் வரலாறு உள்ளதை நினைவில் கொள்ள வேண்டும். 
தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் ஏற்கனவே மும்மொழி கொள்கை நடைமுறையில் இருந்துவருகிறது. அந்த வாய்ப்பை அரசு பள்ளிகளுக்கும் வழங்க வேண்டும். இதற்காக மத்திய அரசு திட்டமிட்டால் திமுக அதை எதிர்க்கிறது. அரசு பள்ளிகளில் படிக்கும் தாழ்த்தப்பட்ட ஏழை மாணவர்களுக்கு கிடைக்கும் கூடுதல் வாய்ப்பை தடுக்கும் நவீன தீண்டாமையை மு.க. ஸ்டாலின் துாண்டுகிறார்.” என்று எல்.முருகன் தெரிவித்தார்.