தேர்தல் நெருங்கி வரும் வேளையில் தமிழகத்தில் ‘வெற்றிவேல் யாத்திரை’யை திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை ஒரு மாத காலத்துக்கு நடத்த தமிழக பாஜக அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அந்த யாத்திரை திருத்தணியில் இன்று தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், “யாத்திரைக்கு, தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை. வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்க முடியாது” என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது.


கரோனா பரவல் தொற்றைக் காரணம் காட்டி தமிழக அரசு இந்த யாத்திரைக்கு அனுமதி மறுத்தது. என்றாலும் திட்டமிட்டபடி யாத்திரை நடைபெறும் என்று தமிழக பாஜக அறிவித்திருந்தது. திருத்தணியில் யாத்திரையைத் தடுக்கும் வகையில் 6 மாவட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். சென்னையிலிருந்து காலை 8 மணிக்கு தமிழக பாஜக  தலைவர் எல்.முருகன் திருத்தணிக்குக் கிளம்பினார். செல்லும் வழியில் கோயம்பேட்டில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “கடவுள் முருகனின் துணைகொண்டு வேல் யாத்திரையைத் திருத்தணியில் தொடங்குகிறோம். கடவுள் அனுமதி தந்ததால்தான் யாத்திரையை நடத்துகிறோம். தமிழக் கடவுள் முருகனுக்கு எதிராக யார் யார் இருக்கிறார்களோ அவர்களின் முகத்திரையைக் கிழிக்கவே இந்த யாத்திரையை நடத்துகிறோம். முருகக் கடவுளை கறுப்பர் கூட்டம் இழிவுப்படுத்தியது. அந்தக் கூட்டத்தின் பின்னணியில் திமுகவும் மு.க. ஸ்டாலினும் உள்ளனர்.” என்று எல்.முருகன் தெரிவித்தார்.