சட்டப்பேரவை தேர்தலில் விடுததைச் சிறுத்தைகள் தனிச்சின்னத்தில் தான் போட்டியிடுவார்கள் என்று திருமாவளவன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கடந்த 2001ம் ஆண்டு முதல் சட்டப்பேரவை தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிட்டு வருகிறது. முதல் தேர்தலிலேயே திமுகவுடன் கூட்டணி அமைத்து திருமாவளவன் களம் இறங்கினார். ஆனால் திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் விசிக வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் போட்டியிட்ட 9 தொகுதிகளிலும் விசிக வேட்பாளர்கள் தோல்வி அடைந்தனர். 2006ம் ஆண்டு தேர்தலில் விசிக ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைத்து களம் இறங்கியது. இந்த முறை விசிக தனிச்சின்னத்தில் போட்டியிட்டது. 9 தொகுதிகளில் அதிமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்ட நிலையில் அதில் இரண்டு தொகுதிகளில் மட்டுமே விசிக வென்றது. 

பிறகு 2011 தேர்தலில் திமுக கூட்டணியில் விசிகவிற்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்த பத்து தொகுதிகளிலும் விசிக வேட்பாளர்கள் தோல்வியை தழுவினர். பத்து தொகுதிகளிலும் தனிச்சின்னத்தில் போட்டியிட்டும் விசிக வேட்பாளர்கள் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து கடந்த தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியில் விசிக இடம்பெற்றது.

முதல் முறையாக விசிக 25 தொகுதிகளில் களம் இறங்கியது. தனிச்சின்னத்தில் போட்டியிட்டும் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட அனைவரும் தோல்வியை தழுவினர். இந்த நிலையில் தான் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கு விசிக தயாராகி வருகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுகவிற்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் ஒரு தொகுதியில் திமுகவின் உதய சூரியன் சின்னத்தின் விசிக வேட்பாளர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த நிலையில் தான் சட்டப்பேரவை தேர்தலில் விசிக தனிச்சின்னத்தில் தான் போட்டியிடும் என்று திருமாவளவன் திட்டவட்டமாக கூறி வருகிறார்.

கடந்த 2001 தேர்தலை தவிர மற்ற அனைத்து தேர்தல்களிலும் விசிக தனிச் சின்னத்தில் தான் போட்டியிட்டு வருகிறது. அப்படி இருக்கையில் வரும் தேர்தலிலும் தனிச்சின்னத்தில் போட்டி என்று விசிக கூறுவது ஏன் என்கிற கேள்வி எழுந்துள்ளது. அதற்கு காரணம் கடந்த முறை அதிமுக 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் களம் இறங்கியது. இதனால் பெரும்பான்மை பலத்துடன் அக்கட்சி ஆட்சி அமைத்தது. இதே பாணியில் இந்த முறை திமுக மிக அதிக தொகுதிகளில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்துள்ளது.

காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளை தவிர மற்ற கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட வைப்பது என்று திமுக மேலிடம் முடிவெடுத்துள்ளதாக கூறுகிறார்கள். அதன்படி, விசிக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மதிமுக போன்ற கட்சிகள் கூட்டணியில் கணிசமான தொகுதிகளை பெற்றாலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று திமுக நிபந்தனை விதிக்கும் என்கிறார்கள். இந்த தகவல் கசிந்த நிலையில் தான் விசிக தலைவர் திருமாவளவன் தனிச்சின்னத்தில் போட்டி என்கிற கருத்தை வலியுறுத்தி கூறுவதாக சொல்கிறார்கள்.