பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் இருவருக்கும் இன்று நடைபெற இருக்கும் இரவு விருந்தில் தமிழகத்தின் உணவு வகைகள் பரிமாற இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்துள்ளனர். இன்று காலை சென்னை விமான நிலையம் வந்த பிரதமர் மோடிக்கு தமிழக ஆளுநர், முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பளித்தனர். அதன் பிறகு ஹெலிகாப்டர் மூலம் கோவளம் சென்ற மோடி அங்கு தங்கியிருந்தார்.

மதியம் சுமார் 2 மணி அளவில் தனி விமானம் மூலம் சென்னை வந்த சீன அதிபர் ஜின்பிங்கிற்கு தமிழக பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் கிண்டியில் இருக்கும் ஐடிசி சோழா நட்சத்திர ஓட்டலுக்கு சென்று ஓய்வு எடுத்தார். பிறகு மாலை 4 மணி அளவில் கார் மூலம் சீன அதிபர் மாமல்லபுரம் சென்றார். செல்லும் வழி எங்கும் அவருக்கு தமிழகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி தமிழக பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் சீன பிரதமரை வரவேற்றார். தொடர்ந்து அங்கிருக்கும் சிற்பங்களை பார்வையிட்ட இருவரும் வெண்ணை உருண்டை பாறை முன்பாக கைகோர்த்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பின்னர் ஐந்து ரதம் பகுதியில் அமர்ந்து இளைப்பாறிய அவர்கள் அங்கு  இளநீரை பருகினர். இதையடுத்து இன்று மாலை கடற்கரை கோவில் அருகில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. அதை இருவரும் இணைந்து கண்டுகளிக்க உள்ளனர்.

இந்தநிலையில் பிரதமர் மோடி சீன அதிபர் ஜின்பிங்கிற்கு இன்று இரவு விருந்து அளிக்கிறார். இந்த விருந்தில் இரண்டு தரப்பில் இருந்தும் 18 பேர் பங்கேற்கின்றனர். இந்திய உணவு வகைகளுடன் தமிழக உணவுகளான தக்காளி ரசம், சாம்பார், கடலை குருமா, அரிசி அல்வா ஆகியவை இடம்பெற இருப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர். மேலும் தமிழக உணவு வகைகளுடன் சீன உணவுகளும் இந்த 28 வகையான உணவுப் பட்டியலில் இடம் பெற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.