ஒமான் வாழ் தமிழ் உணர்வாளர்கள் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்களிடம் ஒரு கோரிக்கையை முன்வைத்தனர். ஓமானில் தமிழ் மாணவர்களின் நலன் காக்கும் வகையில் இந்திய அரசின் CBSE பாடத்திட்டத்தின்படி நடக்கும் பள்ளிகளில் தமிழையும் ஒரு மொழிப் பாடமாக இணைக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரியிருந்தனர். இதனை வலியுறுத்தி மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு அவர் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:- ஓமான் நாட்டில் வேலை மற்றும் தொழில் நிமித்தமாக சென்று வாழும் தமிழர்கள் பல்லாயிரக்கணக்கில் உள்ளனர்.

அங்கு மத்திய அரசின் CBSE பாடத்திட்டத்தின் அடிப்படையில் 22 இந்திய சமுக பள்ளிகள் இயங்கி வருகிறது. இதில் சுமார் 46 ஆயிரம் இந்திய மாணவர்கள் பயில்கிறார்கள். இப்பள்ளிகளில்  இந்திய மொழிகளான இந்தி, சமஸ்கிருதம், மற்றும் மலையாளம் ஆகியன மொழிப் பாடங்களாக நடத்தப்பட்டு வருகின்றது. மேலும் ஐரோப்பிய மொழிகளான பிரெஞ்ச், ஜெர்மன் ஆகிய மொழிகளும் இரண்டாம், மூன்றாம் மொழிப் பாடங்களாகவும் நடத்தப்படுகின்றன.1972 முதல் செயல்படும் இப்பள்ளிகளில் ஒரு மொழிப் பாடமாக கூட செம்மொழியான  தமிழ் அங்கீகரிக்கப்படவில்லை என்பது வேதனை யளிக்கிறது. இது தொடர்பாக ஒமான் வாழ் தமிழ் உணர்வாளர்களும், பெற்றோர்களும் பல முயற்சிகள் செய்தும் பலனில்லை. இக்கோரிக்கையை வலியுறுத்தி, ஓமான் இந்திய தூதரகத்திடம் அவர்கள் மனு அளித்துள்ளனர். 

இந்நிலையில் ஓமான் வாழ் தமிழர்களின் கோரிக்கையை தமிழக அரசு  கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம். தமிழக அரசு  மத்திய அரசிடம் வலியுறுத்தி, ஒமானில் செயல்படும் இந்திய பள்ளிகளில் தமிழை ஒரு மொழிப் பாடமாக நடத்திட ஆவணம் செய்யுமாறு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இதன் மூலம் ஓமானில் வாழும் தமிழ் மாணவ, மாணவிகள் பெரிதும் பயனடைவர் என்பதையும் சுட்டிக் காட்டுகிறோம். இவ்வாறு அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும் இது குறித்து தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மா.பாண்டியராஜன் அவர்களின் கவனத்திற்கும் எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது. மஜக சார்பில் இவ்விவகாரத்தில் முழு கவனம் எடுக்கப்படும் என்று ஒமான் வாழ் தமிழ் உணர்வாளர்களிடம் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA தெரிவித்துள்ளார்.