12ஆம் வகுப்பு ஆங்கில பாடப் புத்தகத்தில் தமிழை விட சமஸ்கிருதம் தொன்மையான மொழி என்று குறிப்பிடப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது தமிழ் மொழி கி.மு. 300 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகவும், சமஸ்கிருத மொழி கி.மு. 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான மொழியாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், உலகிலுள்ள மொழிகளுக்கெல்லாம் தமிழ்தான் மூத்த மொழி என்றும், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

இந்த நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் சரஸ்வதி கான நிலையத்தின் 80ஆவது ஆண்டு விழா நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், “தமிழ், சமஸ்கிருதம் என்கிற இரண்டில் எது பெரிது, எது தொன்மையானது என்று விவாதங்களை தவிர்க்க வேண்டும் என தெரிவித்தார்.

இரண்டும் தமிழ் கலையின் இரு கண்கள் என்ற எண்ணத்துடன் தமிழக அரசு முன்னெடுத்துச் செல்கிறது. நாட்டில் முதல்முறையாக தமிழக அரசின் சார்பில் கலைக் கொள்கையை அறிவிக்க இருக்கிறோம்” என்று பேசினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிவனின் உடுக்கையில் ஒரு பக்கம் தமிழும் மறுபக்கம் சமஸ்கிருதமும் இருப்பதாக பலரும் சொல்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை தமிழ் கலையில் இந்த இரண்டு மொழிகளுமே பங்களித்திருக்கின்றன.


 
அனைத்தும் இணைந்து இயங்கும்போது அதில் அதிகமான வலிமை கிடைக்கும். எது தொன்மையானது என்ற விவாதத்திற்குள் இறங்கும்போது நாம் கலையை மறந்துவிடுகிறோம். ஆகவே அதில் உள்ள சிறப்புகளை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். மொழி என்பதே பண்பாட்டின் ஒரு படிமம்தான் என கூறினார்.