சட்டரீதியாக மட்டுமல்லாமல் மனிதாபிமான முறையில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தமிழக ஆளுநரை சந்தித்து வலியுறுத்தியுள்ளார்.

ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு பல ஆண்டுகளாக சிறையில் வாடும், சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தமிழகம் முழுவதும் எழுந்துள்ளது. அதேநேரத்தில் தமிழக அரசும் அமைச்சரவையை கூட்டி தீர்மானமாக நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளது. ஆளுநரின் கவனத்திற்கு அனுப்பி ஒரு வருடத்திற்கு மேலாகியும் அதன் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ஆளுநர் மௌனம் காத்து வருகிறார். 

இந்நிலையில் நீதிமன்றமும் ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்க தடை இல்லை என கூறியுள்ளது. சிபிஐயும் 7 தமிழர்களை விடுவிப்பதில் தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை திமுக தலைவர் மு.க ஸ்டாலின் இன்று சந்தித்துள்ளார். ஆளுநர் மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. ஆளுநருடனான இந்த சந்திப்பின்போது திமுக தலைவர் மு.க ஸ்டாலினுடன் அக்கட்சியின் நிர்வாகிகள் துரைமுருகன், பொன்முடி, எம்பிக்கள் ஆர்.எஸ் பாரதி, டி.கே.எஸ் இளங்கோவன், தயாநிதி மாறன் ஆகியோரும் உடன் இருந்தனர். ராஜ் பவனில் நடைபெற்ற இந்த சந்திப்பில், ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து ஆளுநரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

திமுக தலைவர் ஸ்டாலின் ஆளுநரிடம் வழங்கியுள்ள கடிதத்தில், சட்டரீதியாக மட்டுமல்லாமல் மனிதாபிமான முறையில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். ஏற்கனவே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க ஒப்புதல் வழங்க வேண்டும் என திமுக வலியுறுத்திய நிலையில் ஆளுநர் அதற்கு உடனே ஒப்புதல் வழங்கியிருந்தார். இந்நிலையில் ஏழு தமிழர்கள் விவகாரத்தில் திமுக ஆளுநரை நேரில் சந்தித்து வலியுறுத்தியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதேபோல் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  இதேவிவகாரம் தொடர்பாக நேற்று மாலை சந்திப்பதாக இருந்தது. ஆனால் அந்த சந்திப்பு திடீரென ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.