கூவத்தூர் ரிசார்ட்டில் அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் சிறை வைக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து ஐ.ஜி.செந்தாமரை கண்ணன், எஸ்.பி முத்தரசி ஆகியோர் தலைமையில் போலீசார் அங்கு குவிக்கபட்டுள்ளனர்.
இந்நிலையில் தங்களுக்கு எதிர்கட்சியினர் வேண்டுமென்றே தொல்லை கொடுத்து வருவதாகவும் தங்களை வெளியேற்ற நினைத்தால் அவ்வளவுதான் எனவும் அமைச்சர்களும் எம்.எல்.ஏக்களும் போலீசாரை மிரட்டி வருவதாக தெரிகிறது.
இதனிடையே காலையிலேயே மட்டன் பாயா குடுத்து மட்டையாக்கி விடுகிறார்கள். அதனால் ஜீரணம் ஆக கஷ்டமா இருக்கு என்று தி.நகர் எம்.எல்.ஏ சத்யா கூறியுள்ளார்.

இன்று காலை தி.நகர் தொகுதி எம்.எல்.ஏ சத்யா டி.சர்ட், ஷாட்ஸ் அணிந்த படி கூவத்தூர் ரிசார்ட் வளாகத்தில் உலாவி கொண்டிருந்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேள்வி கேட்டனர்.
அதற்கு அம்மாவின் நல்லாட்சி மீண்டும் தொடரும் எனவும், வதந்திகள் பரப்புபவர்களை யாரும் நம்ப வேண்டாம் எனவும் தெரிவித்தார்.

கவர்னர் விரைவில் எங்கள் அணியை பதவி ஏற்க அழைப்பார் எனவும், கூவத்தூர் விடுதியில் எம்.எல்.ஏக்கள் அனைவரும் சுதந்திரமாக இருக்கிறோம் எனவும் கூறினார்.
மேலும் நாங்கள் அனைவரும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் தங்கி இருப்பதாகவும், மூன்று வேளையும் நல்ல சாப்பாடு கிடைக்கிறது. அசைவ உணவுகளும் தரப்படுகிறது. அது ஜீரணம் ஆவதற்குத் தான் பிரச்சினை இருக்கிறதே தவிற வேறு எந்த பிரச்சினையும் இல்லை என தெரிவித்தார்.
