பிரதமர் மோடி மீண்டும் பதவியேற்க உள்ள நிலையில் சுவிஸ் வங்கிகளில், கருப்பு பணம் பதுக்கி வைத்துள்ள 11 இந்தியர்களுக்கு சுவிட்சர்லாந்து அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கருப்பு பணம் பற்றி சுவிட்சர்லாந்தில் இருந்து பெறப்படும் தகவல்கள், ரகசிய விதிகளின் கீழ் மத்திய அரசு நிர்வகித்து வருகிறது. அதன் அடிப்படையில் ஒவ்வொரு கருப்பு பண விவகாரம் பற்றிய தகவல்களை, இந்தியா- சுவிட்சர்லாந்து அரசுகள், ஏற்கெனவே மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்தின்படி பகிர்ந்து வருகின்றன. 

அதன்படி, கடந்த மார்ச் மாதத்தில் இருந்து இதுவரை, 25 இந்தியர்களுக்கு சுவிட்சர்லாந்து அரசு சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த 21-ஆம் தேதி மட்டும், 11 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுவிட்சர்லாந்து வங்கிகளில் பணம் வைத்திருப்பதாக கிருஷ்ண பகவான் ராம்சந்த், கல்பேஷ் ஹர்ஷத் கினரிவாலா உள்ளிட்ட இந்தியர்களின் பெயர்கள் ஏற்கனவே கசிந்த நிலையில், நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள 11 வாடிக்கையாளர்கள் பெயரின் முதல் எழுத்து, பிறந்த தேதி, எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்ற சில விவரங்களை, சுவிட்சர்லாந்து அரசு வெளியிட்டுள்ளது. 

அதில் கடைசி வாய்ப்பாக, வங்கி கணக்கு விவரங்களை ஏன் பகிரக்கூடாது என்பதற்கான, உரிய ஆதாரங்களுடன் 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்ய தவறினால், கணக்கு விவரங்களை இந்திய அரசுடன் பகிர்ந்து கொள்வதற்கான அடுத்தக்கட்ட நடவடிக்கையை அரசு முன்னெடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கறுப்பு பணத்தை மீட்பதற்காக, சிறப்பு விசாரணைக் குழு ஒன்றை அமைக்க கடந்த 2011 ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் வரி ஏய்ப்பு செய்த கறுப்பு பணம் என ஆதாரத்துடன் தெரிவித்தால், அந்த வாடிக்கையாளரின் விவரத்தை சுவிஸ் வங்கி இந்தியாவுக்கு வழங்கும் எனவும் கூறிவந்தது.