swamy seeks raid on karunanidhi house

சசிகலாவுடன் தொடர்புடையவர்கள் அனைவரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் வருமான வரித்துறையினர் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்திவருகின்றனர்.

ஜெயா டிவி அலுவலகம், நமது எம்.ஜி.ஆர் அலுவலகம், சென்னை தியாகராய நகரில் உள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா வீடு, ஜெயா டிவியின் சிஇஓ விவேக்கின் வீடு, புதுச்சேரி ஆரோவில்லில் உள்ள தினகரனின் பண்ணை வீடு, மன்னார்குடியில் உள்ள தினகரனின் வீடு, சசிகலாவின் சகோதரர் திவாகரனின் வீடு, திவாகரனின் பண்ணை வீடு, நாமக்கல்லில் சசிகலாவின் வழக்கறிஞர் செந்தில் வீடு, திவாகரனின் நண்பர் வீடு, பெங்களூருவில் உள்ள புகழேந்தியின் வீடு, போயஸ் கார்டன், கோடநாடு பங்களா என சசிகலாவுக்கு தொடர்புடைய அனைவரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

போலி நிறுவனங்கள் தொடங்கி அதன்மூலம் நஷ்ட கணக்கு காட்டி வரி ஏய்ப்பில் ஈடுபட்டது தொடர்பாக இந்த சோதனை நடத்தப்பட்டுவருவதாக தகவல்கள் வெளியாகின்றன. அதேநேரத்தில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என தினகரன் மற்றும் திவாகரன் ஆகியோர் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்நிலையில், சசிகலா தொடர்புடையவர்களின் வீடுகளில் நடத்தப்படும் வருமான வரித்துறையினரின் சோதனை குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கருத்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கருணாநிதி மற்றும் அவரது மகள் செய்த முறைகேடுகளின் 30 பக்க புகாரை நான் கொடுத்துள்ளேன். ஆனால் இதுவரை அவர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்படாதது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

2ஜி அலைக்கற்றை முறைகேடு தொடர்பான பல்வேறு கருத்துக்களையும் புகார்களையும் தெரிவித்துவரும் சுப்பிரமணியன் சுவாமி, தற்போது கருணாநிதி வீட்டில் மட்டும் ஏன் வருமான வரித்துறை சோதனை நடத்தவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.