Asianet News TamilAsianet News Tamil

பெண் நிருபர்கள் குறித்து அவதூறு கருத்து... எஸ்.வி.சேகர் முன்ஜாமீன் கோரி மனு!

S.Ve.Sekar claims bail in Madras High Court
S.Ve.Sekar claims bail in Madras High Court
Author
First Published Apr 23, 2018, 6:10 PM IST


பெண் நிருபர்கள் குறித்து அவதூறு கருத்துக்களைத் தெரிவித்த வழக்கில் எஸ்.வி.சேகர், முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

கல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலில் சிக்க வைக்கும் விதமாக அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி பேசிய ஆடியோ வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த ஆடியோவில் ஆளுநர், கல்வித்துறை உயரதிகாரிகள் குறித்தும் பேசப்பட்டதால் ஆளுநர் இது குறித்து பத்திரிக்கையாள்களிடம் விளக்கம் அளித்தார்.

அந்த பிரஸ் மீட்டின்போது பெண் பத்திரிகையாளர் ஒருவரது கன்னத்தில் ஆளுநர் தன் கையால் தட்டிக்கொடுத்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, ஆளுநரும் அந்த செய்தியாளரிடம்  தன் செய்கைக்கு மன்னிப்பு கோரினார். தொடர்ச்சியான இந்த சர்ச்சைகளை அடுத்து  ஆளுநரை திரும்பப்பெற வேண்டும் என்ற கோரிக்கை தமிழக அரசியல் கட்சிகளிடையே எழ ஆரம்பித்துள்ளது.

இந்த சம்பவத்தை அடுத்து, நடிகர் மற்றும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர், தனது பேஸ்புக் பக்கத்தில் பெண் நிருபர்கள் குறித்து தரக்குறைவாக ஒரு பதிவை வெளியிட்டார். இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்ததால் உடனடியாக அந்த பதிவை அவர் நீக்கி விட்டார். ஊடகங்களிலும்,சமூக வலைத்தளங்களிலும் எஸ்.வி. சேகருக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.

பெண் பத்திரிகையாளர்கள் பற்றி வெளியிட்ட  கருத்துக்காக எஸ்.வி சேகர் மன்னிப்பு கோரினார். மன வருத்தம் ஏற்பட்டுள்ள பத்திரிகை சகோதரிகளிடம் மன்னிப்பு
கேட்டுக்கொள்கிறேன் என எஸ்.வி.சேகர் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், எஸ்.வி. சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். பத்திரிகையாளர் பாதுகாப்பு நல சங்கத்தினரின் புகாரின் பேரில், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 4 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதனை அடுத்து, எஸ்.வி.சேகர் கைது செய்யப்படலாம் என்று கூறப்பட்டது. இந்த நிலையில், எஸ்.வி.சேகர் தலைமறைவாகி உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில், முன்ஜாமீன் கோரி எஸ்.வி.சேகர் இன்று மனு தாக்கல் செய்துள்ளார். அதில், இந்த விவகாரம் தொடர்பாக தான் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு விட்டதாகவும், வேறு ஒருவரின் பதிவை படிக்காமல் ஃபார்வேடு செய்து விட்டதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

உள்நோக்த்துடனோ, குற்ற எண்ணத்துடனோ பதிவை பகிரவில்லை என்றும், எனவே முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் எஸ்.வி.சேகர் அதில் கேட்டுக் கொண்டுள்ளார். எஸ்.வி.சேகரின் மனு நாளை அல்லது நாளை மறுதினம் விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios