sutha sesaiyan says I did not meet when Jayalalitha was treated
ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது ஒருநாளும் நான் சந்திக்கவில்லை என மருத்துவர் சுதா சேஷய்யன் விளக்கமளித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி சென்னை, அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு, லண்டன் டாக்டர், டெல்லி எய்ம்ஸ் டாக்டர்கள், அப்போலோ டாக்டர்கள் என சிகிச்சை அளித்தனர். 75 நாட்கள் சிகிச்சை பெற்று ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி உயிரிழந்தார். ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டது.
இதையடுத்து ஜெ., மரணம் தொடர்பாக, ஓய்வுபெற்ற நீதிபதி, ஆறுமுகசாமி தலைமையிலான, விசாரணை கமிஷன் அமைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். அதன்படி விசாரணை கமிஷன் விசாரணை செய்து வருகின்றது.
இதில், சசி குடும்பத்தாரிடமும், ஜெ குடும்பத்தாரிடமும் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்தி வருகிறார். மேலும் ஜெயலலிதாவுடன் நெருங்கி பழகியவர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றார்.
அதன்படி சென்னை மருத்துவக் கல்லூரி உடற்கூறு இயல் துறையின் இயக்குநராக இருப்பவர் சுதா சேஷய்யன். இவர்தான் ஜெயலலிதா இறந்த பிறகு அவரது உடலை எம்பால்மிங் செய்தார்.
பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், டிசம்பர் 5ம் தேதி இரவு 11.35 மணியளவில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோரிடம் இருந்து தனக்கு அழைப்பு வந்ததாகவும் ஜெயலலிதா உயிரிழந்து விட்டதாகவும், அவரின் உடலை பதப்படுத்துவதற்கான குழுவை அனுப்பும்படி அவர்கள் கேட்டு கொண்டதாகவும் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து சென்னை மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த குழுவினரோடு அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்றதாகவும் ஜெயலலிதா உடலின் வலது காலில் சிறிய குழாய் செருகி அதன் வழியாக திரவத்தைச் செலுத்தினோம் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
சமூக வலைதளங்களில் வெளியானது போன்று ஜெயலலிதா முகத்தில் பெரிய அளவிலான துளைகள் எதுவும் இல்லை எனவும் டிரக்யாஸ்டமி எனப்படும் கழுத்தில் துளையிட்டு சுவாச காற்று கொடுத்து, சிகிச்சை பெற்றவர்களின் உதடுகள் தடித்து காணப்படும் என்பதால்தான் அவ்வாறு அவரது உதடுகள் தடித்து காணப்பட்டன என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜராகுமாறு கடந்த வாரம் மருத்துவர் சுதா சேஷய்யன்னுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி இன்று விசாரணை ஆணையத்தில் ஆஜராகினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜெயலலிதா மரணமடைந்த இரவில் அவரது உடல் எம்பாமிங் செய்யப்பட்டதாகவும், 20 நிமிடங்களில் ஜெயலலிதாவின் உடல் எம்பாமிங் பணி நிறைவடைந்ததாகவும் தெரிவித்தார்.
மேலும் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது ஒருநாளும் நான் சந்திக்கவில்லை என மருத்துவர் சுதா சேஷய்யன் விளக்கமளித்துள்ளார்.
