சினிமா படமான பாகுபலியை கட்டப்பா கொன்றதற்கான காரணத்தை அறிய துடியாய் துடிக்கும் மக்கள், ஜெயலலிதாவின் பின்னால் தொடரும் மர்மங்களை அறிய துடிக்காதது வருத்தத்துக்குரிய ஒன்றுதான்.

ஜெயலலிதா அப்போலோ மருத்துவ மனையில் அனுமதிக்க படுவதற்கு முன்பாக, அதாவது செப்டம்பர் 22 ம் தேதி  போயஸ் கார்டன் வேதா நிலையத்தில் என்ன நடந்தது? 

அதன்பின் 74 நாட்கள் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தபோது  என்ன நடந்தது ? 

ஜெயலலிதாவின் கோடிக்கணக்கான  அசையும் மற்றும் அசையா சொத்துகளை தற்போது நிர்வகிப்பது யார்?

சொத்துக்களை எல்லாம் தற்போது நிர்வகிப்பவர்கள் அனைவரும் இடைக்கால காவலர்களா?  அல்லது நிரந்தர வாரிசுதாரர்களா? 

திரண்ட பெரும் சொத்துக்களின் அதிபதியாகவும், மாநிலத்தின் முதலமைச்சராகவும் திகழ்ந்த ஜெயலலிதா, தன் சொத்துகள் தொடர்பாக எந்த உயிலும் எழுதி வைக்காமலா இறந்து போனார்?

ஜெயலலிதாவின்  சிறுதாவூர் பங்களாவில் கடந்த மாதம்  எப்படி தீவிபத்து ஏற்பட்டது ? அதில் உயிலோ, பிற ஆவணங்களோ எரிக்கப்பட்டனவா ? 

மேலும், ஜெயலலிதாவின்  கொடநாடு எஸ்டேட்டில்  நுழைந்த கொலையாளிகள் யார்? அவர்கள் ஜெ.வின் தனியறையின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த நோக்கம் என்ன ?

இந்த சம்பவம் தொடர்பாக, தேடப்பட்ட முக்கிய குற்றவாளியான  ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் விபத்தில் இறந்தாரா? அல்லது கொல்லப்பட்டாரா?

அதே நாளில், மற்றொரு தேடப்படும் குற்றவாளியான சயானும் கார் விபத்தில் சிக்கியது எப்படி? இரண்டும் ஒரே நாளில் எதேச்சையாக நிகழ்ந்த விபத்துக்களா? அல்லது திட்டமிட்டு நடத்தப்பட்டதா?

கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றான்? என்ற சினிமா கேள்விக்கு விடை காண ஆளாய் பறக்கும் தமிழ் மக்கள், சினிமாவை விஞ்சும் இந்த நிஜ தொடரின் மர்மங்கள் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டாமல் இருப்பது ஏன்?

பாகுபலி  என்ற நிழலைத் துரத்திச் சென்றுபரவசம் கொள்ளும் தமிழ் மக்கள், ஒரு "மகா பலி"யின் பின்தொடரும் மர்மங்களின் உண்மை வெளிவர வேண்டும் என வலியுறுத்தி கேட்பார்களா?