Sushma Swaraj to the President of the review ...? - Disaffected Advani ...?
கடந்த 2012ம் ஆண்டு ஜனாதிபதியாக பிரணாப் முகர்ஜி தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது பதவி காலம், வரும் ஜூலை மாதம் நிறைவு பெறுகிறது. இதையொட்டி, புதிய ஜனாதிபதி தேர்ந்தெடுப்பற்கான பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
முன்னதாக உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர் உள்பட 5 மாநில சட்டமன்ற வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதன் பிறகே, ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
குடியரசு தலைவர் தேர்தல் அறிவிப்பு வெளியாவதை தொடர்ந்து, டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதில், யாரை போட்டி செய்வது என விவாதிக்கப்படுகிறது.

கடந்த மக்களவைத் தேர்தலின்போது, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை பாஜக மேலிடம் அறிவித்தது. இதனால், அக்கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானியின் பிரதமர் கனவு தகர்ந்தது.
இதனால் அதிருப்தியடைந்த அவர் சில காலம் கட்சி பணியில் ஈடுபடாமல் விலகியே இருந்தார். இதை தொடர்ந்து, பிரணாப் முகர்ஜியின் பதவி காலத்துக்கு பிறகு அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக பாஜக சார்பில் அத்வானியின் பெயர் முன்மொழிய வாய்ப்புள்ளதாக கூறி, பாஜக தலைவர்கள் அவரை சமாதானம் செய்தனர்.
இந்நிலையில், ஜனாதிபதி பதவிக்கு அத்வானியின் பெயரை முன்மொழியாமல் பாஜவை சேர்ந்த வேறு மூத்த தலைவர்களின் பெயரை அக்கட்சி மேலிடம் பரிசீலிக்க தொடங்கியுள்ளது.
மக்களவை தலைவர் சுமித்ரா மகாஜன் (74), ஜார்க்கண்ட் மாநில கவர்னர் திரௌபதி முர்மு (59) ஆகிய பெண் தலைவர்கள், ஜனாதிபதிபதவிக்கான தேர்தலில் வேட்பாளராக முன்மொழியப்பட்டால் அதை பெண்களுக்கான அங்கீகாரமாக கருதும் பிரச்சாரமாக மேற்கொள்ளலாம் என பாஜக திட்டமிட்டுள்ளது.

ஆனால், சுமித்ரா மகாஜன், ஜனாதிபதிக்கான தேர்தலில் போட்டியிட்டால், மக்களவைக்கான சபாநாயகரை தேர்வு செய்ய மீண்டும் ஒருவரை தேர்ந்தெடுக்கும் நிலை மத்திய அரசுக்கு ஏற்படும்.
இதனால், ஜனாதிபதிக்கான தேர்தலில் முன்மொழியும் வேட்பாளர்கள் பட்டியலில் சுமித்ரா மகாஜன், திரௌபதி முர்மு மட்டுமின்றி வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி ஆகியோரின் பெயர்களை ஆர்எஸ்எஸ் முன்மொழிந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் மக்களவை, மாநிலங்களவையில் மொத்தம் உள்ள 776 உறுப்பினர்களும், அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேச சட்டமன்றங்களில் மொத்தம் உள்ள 4,120 உறுப்பினர்களும் வாக்களிக்க வேண்டும்.
இதில் ஒவ்வொரு எம்பிக்கும் உரிய வாக்கு மதிப்பு தலா 708 ஆகும். மாநிலங்களில் உள்ள மக்கள்தொகைக்கு ஏற்றவாறு எம்எல்ஏக்களின் வாக்கு மதிப்பு கணக்கிடப்படும். அந்த வகையில், தமிழக எம்எல்ஏவின் வாக்கு மதிப்பு தலா 176 என உள்ளது. உத்தரப்பிரதேச மாநில பேரவை உறுப்பினருக்கு 208ஆகும்.
கடந்த 2012ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் எம்எல்ஏக்களின் மொத்த வாக்கு மதிப்பு 5,49,474; எம்.பி.க்களின் மொத்த வாக்கு மதிப்பு 5,49,408. மொத்த மக்கள் பிரதிநிதிகள் 4,896 பேரின் மொத்த வாக்கு மதிப்பு 10,98,882 ஆகும்.
தற்போது மத்திய அரசில் செயல்படும் பாஜகவுக்கு மக்களவையில் 282 பேர், மாநிலங்களவையில் 56 பேர் என பலம் உள்ளது. நாடு முழுவதும் பாஜக மற்றும் கூட்டணி வசம் உள்ள 10 மாநில சட்டமன்றங்களில் 1,126 உறுப்பினர்கள் உள்ளனர். இருப்பினும், உத்தரப்பிரதேசம், பீகார், மேற்கு வங்கம், தமிழகம் ஆகிய முக்கியமான மாநிலங்களில் பாஜகவுக்கு உறுப்பினர்கள் கிடையாது.

இந்நிலையில், உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தல் தற்போது 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் 4 கட்ட தேர்தல் முடிந்துள்ளது. இதில் பாஜகவுக்கு சாதகமாக உறுப்பினர்களின் எண்ணிக்கை கூடினால் அக்கட்சி உறுப்பினர்களின் பலம் ஜனதிபதி தேர்தலில் முக்கியமானதாகக் கருதப்படும்.
ஜனாதிபதி தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் வெற்றி பெற வேண்டுமானால், மொத்தம் சுமார் 75 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாக்குகள் கிடைக்க வேண்டும். இந்த முயற்சியில் பாஜக முன்மொழியும் வேட்பாளருக்கு வெற்றி கிடைக்குமா என்பது, நடந்து வரும் 5 மாநில சட்டமன்ற முடிவில் தெரிந்துவிடும் என தெரிகிறது.
