Suseenthiran support to Vishal

மாற்றம் வராதா என்று ஏக்கத்துடன் இருக்கும் தம்பிமார்கள், எனக்காக விஷாலுக்கு ஓட்டுப்போடுவார்கள் என்று இயக்குநர் சுசீந்திரன் டுவிட்டரில் கூறியுள்ளார்.

ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்குகளைச் சிதற வைக்கவே, விஷால் வேட்பாளராக களமிறங்கி உள்ளதாகவும், இதற்கு பின்னணியாக தினகரன் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆர்.கே.நகர் தொகுதியில் வேட்பாளராக களமிறங்கும் விஷாலுக்கு நடிகர்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதேபோல், அவருக்கு எதிராகவும் அரசியல் கட்சியைச் சார்ந்த சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் விஷாலுக்கு தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களிடம் இருந்தே எதிர் கருத்துக்கள் எழுந்து வருவதாக தெரிகிறது. நடிகர் விஷால் ஏற்கனவே, நடிகர் சங்க தலைவராகவும், தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் இருந்து வருகிறார். இந்த நிலையில் விஷால், அரசியல் பிரவேசம் செய்துள்ளது, தயாரிப்பாளர் சங்கத்தில் புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது. அரசியல் சார்பற்று செயல்பட்டு வருவது தயாரிப்பாளர் சங்கம் என்றும், அதில் அரசியல் கலப்பதை ஏற்க முடியாது என்றும் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் பலர் ரகசியமாக விவாதித்து வருவதாக தெரிகிறது.

இந்த நிலையில், நடிகர் விஷால், சென்னை, ஆர்.கே.நகர் இடை தேர்தலுக்கான நாளை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதாக நடிகர் விஷால் அறிவித்ததை அடுத்து அவருக்கு நடிகர் கமல் ஹாசன் ஆதரவு அளிக்க உள்ளதாக கூறப்படுகிது.

தான் போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதியில் பல வருடங்களாக தீர்க்கப்படாமல் இருக்கும் பிரச்சனைகளை தீர்ப்பேன் என்று நடிகர் விஷால் கூறியுள்ளார். 

இந்த நிலையில், நடிகர் விஷாலுக்கு, ஆதரவாக இயக்குநர் சுசீந்திரன் டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். முன்னதாக விஷாலுக்கு வாழ்த்து சொன்ன சுசீந்திரன், ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் விஷால் சாருக்கு எனது வாழ்த்துகள். விஷால் சார் நடிகர்கள் சங்க தேர்தல்ல நிக்கும் போதும், தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல்ல நிக்கும் போதும் 100% அவர் தோத்துடுவாருன்னுதான் எல்லாரும் நெனச்சாங்க.

அந்த கருத்துக்கணிப்பை அவரோட உழைப்பும் உண்மையும் பொய்யாக்கி விஷால் சார் ஜெயிச்சார். இந்த தேர்தலிலும் விஷால் சார் ஜெயிப்பார்னு நான் நம்புறேன். விஷால் சாருக்கு என் வாழ்த்துகள். விஷால் சாருக்காக நான் பிரசாரத்தில் ஈடுபடுவேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். பணம் வாங்காமல் ஓட்டுப்போடும் மக்கள் இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள் என்பதை இந்த தேர்தல் உணர்த்தும் என்றும் கூறியுள்ளார். 

விஷால் சாருக்காக நான் பிரசாரம் செய்வேன் என்றும், கண்டிப்பா இந்த லெட்டர் பார்த்தா குற்றம் மட்டுமே கண்டுபிடிக்கும் பரம்பரையைச் சேர்ந்தவன் நீ பிரசாரம் செய்தல் எவன்டா ஓட்டு போடுவான்னு கேப்பானுங்க.

எனக்கு எல்லா ஊரிலும் தம்பிமார்கள் இருக்கிறாங்க. மாற்றம் வராதா என்று ஏக்கத்துடன் அந்த தம்பிகள் எனக்காக விஷால் சாருக்கு ஓட்டு போடுவாங்க. தமிழ் என்ற ஒரு சொல்லைப் பயன்படுத்தி அரசியல் வியபாரம் செய்யாமல், நல்லவன் எவன் வந்தாலும் நமக்கு நல்லது. விஷால் உண்மைக்கும் நல்லவன்.

அரசியல் மாற்றம் வேணும்னு நினைக்கும் விஷால் சாருக்கு ஓட்டுப்போடுங்க. மக்களுக்காக உண்மையா உழைப்பாரு. அது என் கருத்து என்று சுசீந்திரன் டுவிட்டரில் கூறியுள்ளார்.