திமுகவும், நடிகர் சூர்யாவும் மாணவர்களை தற்கொலைக்கு தூண்டக் கூடாது என பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசிய அவர், ‘’பிரதமர் மோடியை ஆதரித்தோ அல்லது எதிர்த்தோ பேசினால்தான் இன்றைய அரசியலில் நிலைத்து நிற்க முடியும் என்ற சூழல் உருவாகி உள்ளது.தமிழகத்தில் பாஜகவை மையமாக வைத்து அரசியல் நடக்கிறது. நீட் தேர்வு விவகாரத்தில், திமுகவும், நடிகர் சூரியாவும் மாணவர்களை தவறாக வழிநடத்த முயல்கின்றனர். தனது நிறுவனம் சார்ந்த மாணவர்களை மட்டும் கருத்தில் கொண்டு நடிகர் சூர்யா பேசக் கூடாது. தமிழகத்தில் லட்சக்கணக்கான மாணவர்கள் நீட் தேர்வு எழுதி உள்ளதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஆன்லைன் வகுப்பு புரியவில்லை என்ற காரணத்திற்காக ஒன்பதாம் வகுப்பு மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். இதற்கு திமுகவும், நடிகர் சூர்யாவும் என்ன சொல்வார்கள்’’ என்று கேள்வி எழுப்பினார். இந்நிலையில், நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுத்த நடிகர் சூர்யாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து இளைஞர் முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசு அமல்படுத்தி உள்ள நீட் தேர்வுக்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நடிகர் சூர்யாவும் நீட் தேர்வுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் குமரன் நினைவகம் முன்பு இந்து இளைஞர் முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்தின்போது நடிகர் சூர்யாவின் உருவப்படத்தை கிழித்தும், அவற்றை எரிக்கும் முயற்சியில் ஈடுபட்டதோடு, செருப்பு மாலை அணிவிக்க முயன்றனர். இதனை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் காவல் துறையினருக்கும், போராட்டக்கார்களுக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.