மத்தியப் பிரதேச சட்டப்பேரவையில் உடனடியாக மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என்று கமல்நாத் அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்து வந்த ஜோதிராதித்ய சிந்தியா கடந்த 10-ம் தேதி அதிருப்தியின் காரணமாக கட்சியில் இருந்து விலகி பாஜகவில் ஐக்கியமானார். அவரது ஆதரவாளர்களாக இருந்து வந்த 6 அமைச்சர்கள் உள்ளிட்ட 22 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி பெரும்பான்மையை இழந்துள்ளது.
இந்நிலையில், சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தும்படி கமல்நாத்துக்கு ஆளுநர் உத்தரவிட்டார். அதன்படி பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாள் ஆளுநர் உரையாற்றிய பின்னர், நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தவேண்டும் என பாஜக எம்எல்ஏக்கள் முழக்கம் எழுப்பி வலியுறுத்தினர். ஆனால்,  கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படாமல் சட்டப்பேரவை 26-ம் தேதி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.


ஆனால், இதை ஏற்றுக்கொள்ளாத பாஜக, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. கமல்நாத் அரசு உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்க உத்தரவிட வேண்டும் என்று முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், மத்திய பிரதேசத்தில் நாளை (20ம் தேதி) நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும்படி இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தனர். 
சட்டப்பேரவையில்  மாலை 5 மணிக்குள் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் சட்டப்பேரவை நிகழ்வுகளை வீடியோவில் பதிவு செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் மூலம் மத்திய பிரதேசத்தில் கமல் நாத் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.