மாநில நிர்வாகம் தொடர்பாக உச்சநீதிமன்ற பிறப்பித்த உத்தரவு புதுச்சேரி அரசுக்கு பொருந்தாது என்று மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மாநில அரசு நிர்வாகத்தில் அமைச்சரவை எடுக்கும் முடிவே இறுதியானது என்று கூறியுள்ளார்.  மாநில அரசு சம்மந்தப்பட்ட எந்த கோப்புகளையும், துணைநிலை ஆளுநருக்கு அனுப்ப வேண்டிய அவசியமில்லை என்றும் நாராயணசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இல்லாத அதிகாரத்தை தமக்கு இருப்பதாக கூறி வரும், துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை இனி உச்சநீதிமன்றமே பார்த்துக்கொள்ளும் என்றார்.  உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வாட்ஸ் அப்பில் தகவல் பரப்பி வருவது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என்று காங்கிரஸ்  உறுப்பினர் லட்சுமிநாராயணன் குற்றம்சாட்டியுள்ளார். முன்னதாக புச்சேரி சட்டப்பேரவையில் மாநில அரசின் நிர்வாகம் குறித்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு புதுச்சேரிக்கு பொருந்துமா இல்லை என உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு விளக்கம் அளித்த நாராயணசாமி புதுச்சேரியை தவிர மற்ற அனைத்து மாநிலங்களுக்கும் உச்சநீதிமன்ற உத்தரவு பொருந்தும் என்று விளக்கமளித்தார்.