Supreme court judges appear at High court

முதல்வர் பழனிச்சாமி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக்கோரி ஸ்டாலின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவோடு சேர்த்து தங்களது தகுதிநீக்கம் செல்லாது என அறிவிக்கக்கோரிய எம்.எல்.ஏக்களின் மனுவும் உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

மிக முக்கியமான அரசியல் சாசன வழக்காக கருதப்படும் இந்த வழக்கில் அரசியல் சாசனத்தின் அனைத்து நுணுக்கங்களையும் நுண்ணறிந்து வாதாட வேண்டும் என்பதால் உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகி அதகளப்படுத்தினர்.

அரசியல் சாசனம் தொடர்பான வழக்குகளில் ஜாம்பவனான கபில் சிபல், ஸ்டாலின் தரப்பிலும் மூத்த வழக்கறிஞர்கள் துஷ்யந்த் தவே மற்றும் சல்மான் குர்ஷித் ஆகியோர் தினகரன் தரப்பிலும் சபாநாயகர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரமும் முதல்வர் தரப்பில் சோமாயாஜியும் ஆஜராகினர்.

இந்த வழக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள், பார்வையாளர்கள் என நீதிமன்றம் நிரம்பி வழிந்தது. இதனால் உயர்நீதிமன்ற வளாகமே இன்று திருவிழா நடைபெறும் இடம்போல காட்சியளித்தது.

இந்த வழக்கில் தினகரன் தரப்பில் ஆஜராகிய துஷ்யந்த் தவே, நீதிமன்றத்தில் மத்திய அரசு, மாநில அரசு, சபாநாயகர் என பல கோணத்தில் வெளுத்து வாங்கினார்.

தமிழகத்தில் நிலவும் அசாதாரண அரசியல் சூழலால், டெல்லியில் சிலர் மகிழ்ச்சி அடைவதாகவும் சபாநாயகர் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாகவும் மாநில அரசு மீதான ஊழல் புகாரை மறைக்கவே இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் வாதாடினார். மத்திய, மாநில அரசுகள், சபாநாயகரை வெளுத்தெடுத்தார் வழக்கறிஞர் தவே.

மீண்டும் அக்டோபர் 4-ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது உயர்நீதிமன்ற வளாகம் திருவிழாக் கோலத்தில் காட்சியளிக்கும்.