மகாராஷ்டிராவில் திடீர் திருப்பமாக குடியரசுத் தலைவர் ஆட்சி விலக்கப்பட்டு பாஜக ஆட்சி அமைந்தது தொடர்பாக விடுமுறை தினமான இன்று உச்ச நீதிமன்றம் அவசரமாக விசாரிக்கிறது.
 மகாராஷ்டிராவில் எந்தக் கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காததாலும். பாஜக கூட்டணியிலிருந்து சிவசேனா விலகியதாலும் யாரும் ஆட்சி அமைக்க முடியாமல் போனது. எனவே மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இருந்தபோதும் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டன. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு குடியரசுத் தலைவர் ஆட்சி மகாராஷ்டிராவில் விலக்கப்பட்டு, அவசர அவசரமாக தேவேந்திர பட்வினஸுக்கு ஆளுநர் முதல்வராகப் பதவி பிரமாணம் செய்துவைத்தார். துணை முதல்வராக தேசியவாத காங்கிரஸைச் சேர்ந்த அஜித் பவார் பதவியேற்றார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்து, பாஜக ஆட்சி அமைத்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் இந்தப் பதவியேற்பை எதிர்த்து சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் உச்ச நீதிமன்றத்தை அணுகின. இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், “மகாராஷ்டிர  ஆளுநர் பாரபட்சமாக நடந்துள்ளார்.  ஆளுநர் மாளிகையை  கேலிக்கூத்தாக்கி விட்டார். 22-ம் தேதி இரவுக்கும் 23-ம் தேதி காலைக்கும் இடையே ஆளுநரின் நடவடிக்கைகளால், 23-ம் காலை பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

 
மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் உள்ள அரசியல் கட்சியின் தூண்டுதலின்பேரில் ஆளுநர் செயல்பட்டுள்ளார். தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சி அமைக்க எப்படி, எந்த விதத்தில் உரிமை கோரினர் என்பது பற்றி பொதுவெளியில் எதுவும் இல்லை. அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்ததில் ஆளுநர் தன்னிச்சையாக செயல்பட்டுள்ளார்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு என்பதால், விடுமுறை தினமான இன்றே இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்கிறது. காலை 11.30 மணிக்கு விசாரிக்கப்படும் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


மகாராஷ்டிராவில் பதவியேற்ற அரசு பெரும்பான்மையை நிரூபிக்க நவம்பர் 30-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சிவசேனா, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தங்கள் எம்.எல்.ஏ.க்களை ரிசார்ட்டில் தங்க வைத்துள்ளன. இந்நிலையில் உச்ச நீதிமன்ற இன்று பிறப்பிக்கும் உத்தரவையடுத்து மகாராஷ்டிர நிலவரம் தெளிவு பிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.