எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்ட திருத்தம் தொடர்பான தீர்ப்பிற்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. 

எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் அளிக்கப்படும் புகார்களில் அரசு ஊழியர்கள், தனிநபர்களை உடனடியாகக் கைது செய்யக்கூடாது. உரிய விசாரணைக்குப் பிறகே கைது செய்ய வேண்டும் என்று கடந்த மார்ச் 20-ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

இந்த தீர்ப்பு எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்துப்போக செய்வதாக அமைந்துள்ளதாக தலித் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் இந்த தீர்ப்புக்கு எதிராக மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, பீகார் உள்ளிட்ட நாட்டின் வட மாநிலங்களில் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது. 

இந்த போராட்டத்தின் போது மூண்ட கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடமாநிலங்களில் பதற்றமான சூழலே நிலவுகிறது. உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அதிரடி படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

வடமாநில வன்முறையை சுட்டிக்காட்டி, எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டம் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு இடைக்கால தடை விதிக்குமாறு மத்திய அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த மனுவை இன்று மதியம், உச்சநீதிமன்ற நீதிபதிகள் கோயல் மற்றும் லலித் அடங்கிய அமர்வு இன்று விசாரித்தது. அப்போது, வடமாநிலங்களின் வன்முறையை சுட்டிக்காட்டி அந்த தீர்ப்புக்கு அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் இடைக்கால தடை கோரினார்.

அதற்கு விளக்கமளித்த நீதிபதிகள், எஸ்சி-எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டம் தொடர்பாக நாங்கள் அளித்த தீர்ப்பை சரியாக படித்து பார்க்காதவர்கள்தான் தெருக்களில் இறங்கி போராடுகின்றனர். இந்த சட்டத்தினால் அப்பாவிகளும் பாதிக்கப்படுகின்றனர். அதனைத் தடுப்பதற்காகவே விசாரணை கமிஷன் ஒன்றினை அமைக்க உத்தரவிட்டுளோம்.  அந்த கமிஷனின் விசாரணை முடிவில் புகார் அளிக்கப்பட்டவர் மீது தவறு இருந்தால் உறுதியாக நடவடிக்கை எடுக்கலாம் என தெரிவித்த நீதிபதிகள், தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டனர்.