ரஜினியை போல் ரசிகர்களை ‘வெச்சு செய்யுற’ ஹீரோ வேறு யாரும் இருப்பார்களா என்பது சந்தேகமே! தலைவனை போலவே தாங்களும் பேரன் பேத்தி எடுத்துவிட்ட பிறகும் அவரது ரசிகர்கள் அவரிடம் என்னென்னவோ எதிர்பார்க்கிறார்கள் ஆனால் தலைவன் எதையும் கண்டுகொள்வதாக தெரிவதில்லை.

இந்நிலையில் அவர்களின் நெடுநாள் ஆசையான ‘ரஜினியுடன் ஒரு  புகைப்படம்’ எனும் ஆசையை ஒரு வழியாக இன்று முதல் நிறைவேற்ற துவங்கியிருக்கிறார் ரஜினி. அதுவும் பார் கோடுடன் கூடிய அடையாள அட்டை கொடுக்கப்பட்டிருக்கிற ரசிகர்கள் மட்டுமே ராகவேந்திரா மண்டபத்தினுள் நுழைந்து ரஜினியுடன் புகைப்படம் எடுக்க முடியும் என்று கட்டுப்பாடு வேறு.

இந்நிலையில் ‘உண்மை ரசிகர்களுக்கு பார்கோடு அட்டை கொடுக்காமல் காசு வாங்கிக் கொண்டு யார் யாருக்கெல்லாமோ கொடுத்துவிட்டார்கள். இதை கண்டித்து ரஜினியின் வீட்டின் முன் தீ குளிப்போம்.’ என்று சேலம் உள்ளிட்ட சில மாவட்ட ரசிகர்கள் கொதித்துக் கொண்டிருப்பது தனி கதை. 

இந்நிலையில் இன்று கரூர், கன்னியாகுமரி உள்ளிட்ட மூன்று மாவட்ட ரசிகர்களுடன் புகைப்படம் எடுக்கும் நிகழ்வை துவக்கியிருக்கிறார் ரஜினி. போட்டோ எடுக்கப்படும் மேடையில் அவர் தோண்றியதும், தலைவா! தலைவா! என உற்சாக குரல் கொடுத்த ரசிகர்கள் மத்தியில் பேசியவர் ‘என் பெயரை வைத்து சில அரசியல்வாதிகள் ஆதாயம் தேடிக் கொள்கிறார்கள். எனது ரசிகர்களையும் அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்திக் கொண்டனர். என் ரசிகர்களாகிய உங்களில் சிலரும் நான் அரசியலுக்கு வரவேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள். நான் அரசியலுக்கு வரமாட்டேன்” என்றார்.

 உடனே ‘அப்பாடா தலைவர் அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா? அப்படின்னு இழுத்துட்டிருந்த விஷயத்துக்கு அவர் வாயாலேயே முற்றுப்புள்ளி வெச்சுட்டாருடா. இனி பொழப்பையும், அவரு நடிச்ச படம் வந்தா அதை மட்டும் பார்த்துட்டு கம்முன்னு கெடப்போம்.” என்று ரசிகர்கள் முணுமுணுத்த மாத்திரத்தில் மீண்டும் பேச்சை தொடர்ந்த ரஜினி “அப்படியே அரசியலுக்கு நான் வரும் நிலை ஏற்பட்டால் பணத்துக்காக அரசியல் செய்ய மாட்டேன், பணத்துக்காக ஆட்களை சேர்க்க மாட்டேன்.’ என்று பழைய கொக்கியை மீண்டும் செருகியுள்ளார். இது ஒரு தெளிவுக்கு வந்த ரசிகனை ரொம்பவே குழப்பியிருக்கிறது. 

‘ரஜினியும் தமிழக அரசியலும்!’ என்கிற கான்செப்டில் அடிக்கடி விவாதம் நடத்தும் விமர்சகர்கள் ரஜினியின் இந்த நிலைப்பாட்டை வெகுவாக விமர்சித்திருக்கின்றனர். ”தன் படங்கள் வெளி வரும்போதும், புது படத்துக்கு பூஜை போடும் போதும் மட்டும் ரசிகனை சந்திப்பதும், அரசியல் பற்றி பேசுவதும் ரஜினியின் வாடிக்கையாக இருந்தது. தன் படம் பரபரப்பாக வேண்டும் எனும் சுயநலத்தோடே இதை செய்கிறார் என்கிற விமர்சனம் அவர் மீது இருக்கிறது. 

இப்போது அதை மீண்டும் மெய்ப்பிக்கும் விதமாக ரஜினி பேசியிருக்கிறார். அவர் தனது வயது என்ன? என்பதை ஒரு முறை நினைவுபடுத்திக் கொண்ட பிறகு இது மாதிரியான விஷயங்களை பேசட்டும். ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது என்று யாரும் இங்கே சொல்லவில்லை. ஆனால் வருகிறேன் என்றால் வரவேண்டும், இல்லையென்றால் விட்டுவிட வேண்டும். அதைவிடுத்து தனது ரசிகனின் உணர்வோடு விளையாடுவது போல் அவ்வப்போது பேசி மறைவது என்ன கண்ணாமூச்சி விளையாட்டு?

’ஒரு வேளை நான் அரசியலுக்கு வரவேண்டிய சூழல் வந்தால்’ என்று இன்றும் பேசியிருக்கிறார். ரஜினி இளமை மற்றும் நடுத்தர வயதில் இருந்தபோதே அரசியலில் இருந்து கடும் நெருக்கடிகளையும் பார்த்துவிட்டார், காலில் விழுந்து அவரை தலைவர்கள் பூஜித்ததையும் பார்த்துவிட்டார். அப்போதெல்லாம் அரசியலுக்கு வராதவர் இனி வரவேண்டிய சூழல் ஏன் வரப்போகிறது? ரஜினியின் வயதை வைத்து அவரை எந்த அரசியல்வாதியும் இனி வருங்காலத்தில் பெரிதாக சீண்டப்போவதில்லை. 

கலைஞரும், ஜெயலலிதாவும் அடித்து விளையாடிய அரசியல் காலங்கள் போய்விட்டன. இப்போது அரசியலின் போக்கு வேறு மாதிரி உள்ள நிலையில் ரஜினியின் அப்ரோச்மெண்டெல்லாம் எடுபடாது என்பது திண்ணம். வெறும் சினிமா மாயை மட்டும் வெற்றியை குவித்துவிடாது. 

இது ரஜினிக்கும் தெரியும். வெறி ரசிக பட்டாளத்தை வைத்திருந்த சிரஞ்சீவி அரசியலில் சந்தித்த தோல்வியையும், தமிழ்நாட்டில் விஜயகாந்த் படும் பாடையும் அவர் பார்த்தே வைத்திருக்கிறார். 

எனவே இன்னமும் ஒத்தையா ரெட்டையா என்று சீண்டிக் கொண்டிருக்காமல், தன் ரசிகனை தன் சினிமாவுக்கான பார்வையளானக மட்டுமே பயன்படுத்துவதுதான் ’பெரியவர்’ ரஜினிக்கும் அழகு, அவரது புகழுக்கும் அழகு. அவர்  வார்த்தைக்கு வார்த்தை சொல்லுகின்ற ஆன்மிகம் இனியாவது அவரை இந்த விஷயத்தில் பண்படுத்தட்டும்.” என்று போட்டுத்தாக்கி இருக்கிறார்கள். 

ரஜினி தெளிவானவர்! இந்த யதார்த்தத்தை இனியாவது புரிந்து கொள்வார் என்று நம்புவோம்.