தமிழகத்தில் நெடுங்காலமாக அரசியல் கட்டுரைகளில் கோலோச்சிக் கொண்டிருக்கும் வார மற்றும் நாளிதழ் நண்பர்களின் வேகத்தை அடிக்கடி தாண்டிக் கொண்டிருக்கிறது லேட்டஸ்டாய் வந்திருக்கும் நம் ‘ஏஸியா நெட் தமிழ்’ இணையதளம். அதற்கு சர்வதேச ஃபிகரான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தே சாட்சியாகி இருக்கிறார். 

விஷயம் வேறொன்றுமில்லை. ரஜினிகாந்தின் மக்கள் மன்ற நிர்வாகிகள் சிலர் பதவிகளில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்டனர். அதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு, சில விமர்சனங்களையும் வைத்தன. இது ரஜினியின் கவனத்துக்குப் போக அவரோ தன்  ரசிகர்களை நோக்கி கடும் கண்டிப்புடன் ஒரு அறிக்கையை வெளியிட்டார். கிட்டத்தட்ட பிரளயத்தை ஏற்படுத்திவிட்டது இந்த அறிக்கை. 

இது குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடும், கருணாநிதியின் ‘மூத்த பிள்ளை’யுமான முரசொலியோ வெளுத்து வாங்கியது சூப்பர் ஸ்டாரை. அந்த நாளிதழின் ‘சிலந்தி’ பக்கத்தில் ’ஹு இஸ் திஸ் பிளாக் ஷீப்? மே! மே! மே!’ என்று போட்டுத் தாளித்து எடுத்திருந்தனர். 

கட்டங்கட்டி வந்திருந்த இந்த செய்தி தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள் பலரின் கவனத்துக்கே போகாத நிலையில், நமது ஏஸியாநெட் தமிழ் இணையதளமோ அந்த செய்தியை வைத்து அழகான அரசியல் பின்னணியில் ஒரு கட்டுரையை கட்டங்கட்டியது.

 ‘போயஸை கடிக்கும் கோபாலபுர சிலந்தி’ எனும் தலைப்பில் அந்த விரிவான கட்டுரையை எழுதியிருந்தோம். அதில்... முரசொலியில் ‘சிலந்தி’ எனும் பெயரில் எழுதுபவர் கருணாநிதியின் மருமகனும், முரசொலி மாறனின் தம்பியுமான முரசொலி செல்வம் என்பதையும், எப்படி அவர் கலாநிதி மாறனுக்கும் ஸ்டாலினுக்கும் இடையில் நின்று சர்க்கஸ் ஆடுகிறார் என்பதையெல்லாம் புட்டுப் புட்டு வைத்திருந்தோம். 

வைரலான நமது இணையதளத்தின் அந்த பதிவு ரஜினிகாந்த், ஸ்டாலின் உள்ளிட்ட இரு தரப்புகளின் அத்தனை நபர்களின் கவனத்துக்கும் போனதோடு, அரசியல் பார்வையாளர்கள் அத்தனை பேராலும் வாசிக்கப்பட்டது. 

சிலந்தியின் சீற்றத்தைக் கண்டு பெரும் கோபம் கொண்டுவிட்டார் ரஜினிகாந்த். ’என் ரசிகர்கள் கூட நான் பேசுறதுல இவங்களுக்கு என்ன வேலை?’ என்று அவர் எகிறினார். அவரை கூல் பண்ணும் விதமாக யோசித்த அவரது ராகவேந்திரா அலுவலக நிர்வாக தரப்பு, ரசிகர் மன்ற நிர்வாகிகள் சிலரை வைத்து இணையதளத்தில் ‘ஆடு நனையுதேன்னு ஓநாய் (தி.மு.க.) அழ வேண்டிய அவசியமென்ன? எங்க தலைவர் எங்களை எப்படி வேணும்னாலும் திட்டுவார், அரவணைப்பார். இதில் நீங்கள் விமர்சனம் வைக்க வேண்டிய அவசியமே இல்லை. உங்க கட்சியை பிழைக்க வைக்க வழியை பாருங்க. ’ என்று தெறிக்க விட்டிருந்தனர். 

அதோடு மட்டுமில்லாமல் முரசொலியின் நிர்வாக தரப்பான உதயநிதி ஸ்டாலினின் கவனத்துக்கு இதை கொண்டு போய் உள்ளது ரஜினி தரப்பு.சூப்பர்ஸ்டார் இந்த ‘சிலந்தி’ கட்டுரையை வாசிச்சு ரொம்பவே ஃபீலாயிட்டாரு. ஏன் இப்படியெல்லாம்? என்றெல்லாம் புலம்பியிருக்கின்றனர்.

 பல முக்கிய மனிதர்களிடமிருந்து கூட இப்படியான போன்கால்கள் வர, முரசொலி அலுவலக நிர்வாகம் நெளிந்துவிட்டது. உடனே உதயநிதியோ அதை அப்படியே ஸ்டாலினுக்கு மடை மாற்ற, அவரோ முரசொலி செல்வத்திடம் துளைத்தெடுத்துவிட்டாராம். 

விளைவு, “சூப்பர் ஸ்டார் ரஜினி குறித்து முரசொலியில் வெளி வந்த கட்டுரை சில நல்ல மனதை புண்படுத்துவதாக உள்ளதென்று கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. இனி அத்தகைய செய்திகளை வெளியிடுவதில் கவந்த்துடன் செயல்படுமாறு ஆசிரியர் குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்படிக்கு (ஆ-ர்)” என்று ஒரு சம்பிரதாய வருத்தத்தை தெரிவித்திருக்கின்றனர் முரசொலி  நாளிதழ் தரப்பிலிருந்து. 

ஆனால் விமர்சகர்களோ...”வருத்தம் தெரிவிக்கிற மாதிரி சொல்லி லைட்டா மிரட்டவும் செஞ்சிருக்காங்க. இனி அத்தகைய செய்திகளை வெளியிடுவதில் கவனத்துடன் செயல்பட ஆசிரியர் குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’ன்னுதான் சொல்லியிருக்காங்க. இப்படியெல்லாம் இனி வம்பிழுக்க மாட்டோமுன்னு முடிவெடுக்கலை. மேலும், சிலந்தி!  பகுதியை எழுதுவது அல்லது எழுதப்பட்டு வந்ததுக்கு இறுதி வடிவம் கொடுப்பதே முரசொலி செல்வம்தானே! நல்லா பண்றாங்கய்யா பாலிடிக்ஸ்.” என்கின்றனர். 

ஆக கண்டும் காணாமலும் கடந்து போக வேண்டிய ஒரு அரசியல் முக்கியத்துவத்தை திரை விலக்கி காட்டி, அதைத்தொடர்ந்து வி.ஐ.பி.க்களிடையே விவாதங்களைக் கிளப்பியதால் வாசகர்கள் நம் இணையதளத்துக்கு செம்ம மைலேஜ் கொடுத்திருக்கின்றனர்.