அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் ரஜினியை மும்பையில் சந்தித்து பேசியதாக தகவல் வெளியான நிலையில் அது தவறு என்றும் பிரசாந்த் கிஷோர் ரஜினியை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து பேசியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

மோடி, நிதிஷ்குமார், ராகுல் காந்தி, ஜெகன் மோகன் ரெட்டி தற்போது மம்தா பானர்ஜி வரை இந்திய அளவில் மிகப்பெரிய தலைவர்களுக்கு வியூக வகுப்பாளராக இருந்தவர், இருப்பவர் பிரசாந்த் கிஷோர். அண்மையில் ஆந்திராவில் ஜெகன் ஆட்சி அமைக்க இவர் முக்கிய காரணமாக இருந்தார். இதனை தொடர்ந்தே மம்தா பானர்ஜி உடனடியாக பிரசாந்த் கிஷோரை தனது ஆலோசகர் ஆக்கினார்.

இதே போல் தமிழகத்திலும் கூட பிரசாந்த் கிஷோரை வளைத்துப் போட அதிமுக, மக்கள் நீதி மய்யம் முயற்சி மேற்கொண்டது. இதற்காக கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் பிரசாந்த் கிஷோர் சென்னை வந்திருந்தார். அப்போது கமல் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் நேரில் சந்தித்து கிஷோரிடம் பேசினர். கமல் கட்சி அலுவலகத்தில் சென்ற கிஷோர் சில யோசனைகளை கூறியதாக தகவல் வெளியானது.

இதனால் மக்கள் நீதி மய்யம் இனி பிரசாந்த் கிஷோர் ஆலோசனையில் செயல்படும் என்று கூறப்பட்டது. ஆனால் அதன் பிறகு அது பற்றிய தகவல் இல்லை. இதேபோல் அதிமுக முக்கிய அமைச்சர்கள் இருவரும் பிரசாந்த் கிஷோரை சந்தித்து அதிமுகவிற்கு வியூகம் வகுக்க கேட்டனர். ஆனால் இரட்டை தலைமை என்றால் வாய்ப்பில்லை என்று அவர் ஜகா வாங்கினார்.

இந்த விஷயங்கள் எல்லாம் வெளியே கசிந்த நிலையில் பிரசாந்த் கிஷோர் உண்மையில் சென்னை வந்ததே ரஜினியை சந்திக்கத்தான் என்கிறார்கள். இதற்காக ரஜினியும் கூட கடந்த மாதம் திடீரென தர்பார் படப்பிடிப்பில் இருந்து அவசரமாக சென்னை திரும்பினார். மிகவும் ரகசியமாக நடைபெற்ற இந்த சந்திப்பின் போது தான் ரஜினிக்கான சட்டமன்ற தேர்தல் வியூகம் வகுக்கப்பட்டதாக சொல்கிறார்கள்.

கட்சியின் பெயர் அறிவிப்பு, தேர்தல் கூட்டணி, எதிர்கட்சிகளின் பலம், ரசிகர் மன்ற நிர்வாகிகள் செயல்பாடு போன்றவை குறித்து ஒரு நாள் முழுவதும் நடைபெற்ற ஆலோசனையின் அடிப்படையில் தற்போது ரகசியமாக ரஜினிக்காக பிரசாந்த் கிஷோர் டீம் தமிழகத்தில் வேலையை ஆரம்பித்துவிட்டதாக கூறுகிறார்கள். சென்னையில் இந்த சந்திப்பு நடைபற்ற நிலையில் சுமார் ஒரு மாதம் கழித்தே இந்த தகவல் லீக்கானது.

அதுவும் கூட மும்பையில் ரஜினி – பிரசாந்த் கிஷோர் சந்திப்பு என்பது அபத்தமான தகவல் என்றும் அப்படி ஒரு நிகழ்வு நடைபெறவே இல்லை என்று ரஜினி தரப்பில் இருந்து அடித்துக்கூறுகிறார்கள். ஆனால் சென்னையில் நடைபெற்ற சந்திப்பு குறித்து கேட்ட போது அதனை மறுக்காமல் சிரிக்கின்றனர்.