அதிமுகவின் தேர்தல் வியூகத்தை வகுக்க முழுமையாக களமிறங்கி விட்டார் சுனில். கொரோனாவுக்கு எதிராக  எடப்பாடி தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வர, 2021ம் ஆண்டு தேர்தலுக்கு வியூகம் வகுக்கும் வேலைகளில் முழுமையாக களமிறங்கி விட்டார் சுனில். முன்பு திமுகவிற்காக வேலை செய்தவர் அதிமுகவிற்காக என்னவெல்லாம் செய்யப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு திமுக- அதிமுக ஆகிய இரு கட்சியினருக்கும் ஏற்பட்டுள்ளது. 

கொரோனாவுக்கு முன்னதாகவே பிரசாந்த் கிஷோரிடம் கைகோர்த்தது திமுக. தேர்தலுக்கான வியூகங்களை வகுக்கத் தொடங்கியபோது வந்தது கொரோனா. தற்போது கொரோனா விவகாரத்தில் திமுக எடுக்கும் நடவடிக்கைகள், ஒன்றிணைவோம் வா பிரச்சாரம், அடிக்கடி அறிக்கைகள், இணையதள ஹேஸ்டேக் ட்ரெண்டுகள் இவை அனைத்தும் பிரசாந்த் கிஷோரின் திட்டப்படி நடப்பதாகவே கூறப்படுகிறது. ஆனால், திமுகவினருக்கும் பிரஷாந்த் கிஷோருக்கும் ஏழாம்பொருத்தமாக இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. சொல்லப்போனால் பிரஷாந்த் கிஷோர் போட்டுக்கொடுத்த ஒன்றிணைவோம் வா திட்டத்தால் தான் அருமையாக செயல்படக்கூடிய எம்.எல்.ஏ., ஜெ.அன்பழகனை இழந்துவிட்டோம் என்கிற விரக்தி பி.கே மீது திமுகவினருக்கு ஏற்பட்டுள்ளதாக  வெளிப்படையான பேச்சுகள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில்தான் சுனில் அதிமுகவுக்காக தான் வகுத்துள்ள திட்டங்களை செயல்படுத்த களமிறங்கி இருக்கிறார். கொரோனா விவகாரத்தில் அதிமுக எடுக்கும் நடவடிக்கைகளும் சுனிலின் திட்டப்படியே அரங்கேறுவதாக கூறப்படுகிறது. கர்நாடக மாநிலம், பெல்லாரியை பூர்வீகமாக கொண்டவரான சுனில் கனுகோலு, சென்னையில் பிறந்து வளர்ந்தவர். அமெரிக்காவில் உயர் கல்வி முடித்தவர். அங்கு சிறிது காலம் மேனேஜ்மெண்ட் கன்சல்டிங் பணியிலும் இருந்துள்ளார். இந்தியா திரும்பிய அவர், அரசியல் பக்கம் தனது கவனத்தை திருப்பினார். குஜராத்தில் அசோசியேசன் ஆஃப் பில்லியன் மைண்ட்ஸ் நிறுவனத்திற்கு தலைமையேற்ற சுனில், 2014-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜக பிரதமர் வேட்பாளராக களமிறங்கிய மோடிக்காக முக்கிய பணியாற்றினார். 2016 ஆம் ஆண்டில், சுனில் பாஜகவுக்கான பில்லியன் மைண்ட்ஸ் சங்கத்தின் (ஏபிஎம்) தலைவராக இருந்தார். பாஜகவுக்கான பிரச்சார மூளையாக இந்த ஏபிஎம் இருந்தது. 

அந்த ஏபிஎம்-க்கு மூளையாக இருந்தவர் சுனில். பாஜகவின் உத்தரபிரதேசம், உத்தரகண்ட், இமாச்சல பிரதேசம், குஜராத் மற்றும் கர்நாடக தேர்தல் பிரச்சாரங்களில் சுனில் குறித்துக் கொடுத்தது வாக்குகளாக அறுவடை செய்யப்பட்டன. இந்த மாநிலங்களில்  பாஜக வெற்றி பெற்றது அல்லது ஒற்றை கட்சியாக பெரும்பான்மை பெற்று மிகப்பெரிய சக்தியாக, கட்சியாக உருவெடுத்தது.

பின்னர், 2017-ம் ஆண்டில் உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுக்கான வியூகங்களை வகுத்துக்கொடுத்தார். அதில் முழுமையாக வெற்றியும் கண்டார். 2016 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்காக வியூகங்களை வகுத்த சுனில், ’நமக்கு நாமே’என்கிற பிரசார திட்டத்தை ஸ்டாலினுக்காக வகுத்துக் கொடுத்தார். மு.க.ஸ்டாலினின் இமேஜ் இப்போது இந்த அளவுக்கு மேம்பட்டிருக்கிறது, ஓரளவிற்காக பேசுகிறார், உருவத்தில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஆளுமை வந்திருக்கிறது என்றால் அதற்கு சுனில் அப்போது வகுத்துக் கொடுத்த திட்டங்களும் செயல்பாடுகளும்தான் காராணம்.  

2016ம் ஆண்டு தேர்தலின்போது கருணாநிதி செயல்படமுடியாத தலைவராக இருந்தார். ஜெயலலிதாவின் அலை எங்கும் வீசியது. ஆனால் அந்தத் தேர்தலில் சொற்ப விகிதத்தில் ஒரு சதவிகித வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவிடம் தோல்வியை தழுவியது திமுக. அதாவது நூலிழையில் அடைந்த தோல்வி அது. அந்தத் தோல்விக்கு பிரச்சார யுக்திகளை தாண்டியும், கூட்டணி உள்ளிட்ட காரணங்கள் இருந்தன. ஆனாலும் திமுக நூற்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் வென்று அசத்தியதற்கு காரணம் சுனில் வகுத்துக் கொடுத்த செயல்பாடுகளே முக்கியக் காரணம். அந்த தேர்தலில் ஜெயலலிதாவே கொஞ்சம் திணறித்தான் போனார்.  

2019 மக்களவை தேர்தலிலும் திமுகவுக்காக சுனில் பணியாற்றினார். இந்தியா முழுவதும் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மாபெரும் வெற்றி பெற, தமிழகத்தில் பாஜக கூட்டணியால் சோபிக்க முடியவில்லை. பணபலம் அதிகார பலம் இரண்டும் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளிடம் இருந்தும் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே ஆளும் கட்சி வெற்றி பெற்றது. இது இந்திய அளவில் ஒட்டுமொத்த அரசியல்வாதிகளையும் தமிழகத்தை நோக்கி திரும்பிப்பார்க்க வைத்த நிகழ்வு. இதன் பின்னணியில் சுனிலின் அளப்பறிய பங்கு இருந்ததை யாரும் மறுப்பதற்கில்லை. அந்தத் தேர்தலில் திமுக அபார வெற்றி கண்டு பாராளுமன்றத்திற்குள் காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டது. 

அதன்பிறகுதான் திருப்பம். திடீரென திமுக தலைமை பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ஐ-பேக் பக்கம் திரும்பியதால், விலகிய சுனில் பெங்களூருக்கு சென்றார். தேர்தல் உத்திகளை வகுப்பதில் இருந்து சிறிதுகாலம் விலகி இருக்கப்போவதாக கூறினார். ஆனால்,எடப்பாடி பழனிசாமி தரப்பு, அரசின் கொள்கை மற்றும் பிரசார உத்திகளை வகுத்துக் கொடுக்க சுனிலை அழைத்து வந்தது. 

திமுக வலுவாகவும், அதிமுக பலவீனமாக உள்ளதாகவும் பொதுவான கருத்து நிலவுகிறது. ஆனால், வடநாட்டு அரசியலை மட்டுமே தெரிந்த பிரஷாந்த் கிஷோர் வியூகம் வேறு. சுனில், கர்நாடகா மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவரானாலும், சென்னையில் பிறந்தவர். தமிழ் நாட்டு அரசியலை அறிந்தவர். ஏற்கெனவே திமுகவிற்காக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். திமுகவின் பலமும், பலவீனமும் அவருக்கு தெரியும். எதிர் முகாமில் இருக்கும்போதே அதிமுகவின் பலத்தையும், பலவீனத்தையும் நிச்சயம் அறிந்து வைத்திருப்பார். தற்போது தன் அணியின் பலம், பலவீனம், எதிரணியின் வீக்னஸ் பாயிண்டுகளும் அவருக்கு அத்துபடி. ஆகவே நிச்சயமாக பிரஷாந்த் கிஷோரை விட, அனைத்து விஷயங்களிலும் பல படிகள் முன்னேறி இருப்பார் என்பதில் ஐயமில்லை. 

தன் பலம், பலவீனம் இரண்டையும் அறிந்தவர் என்கிற விஷயத்தை புரிந்து சுனிலால் உள்ளூர பதற்றத்தில் இருக்கிறது திமுக. ஆகவே திமுகவின் வியூகத்தை சுனில் அறிந்து வைத்திருப்பதால், திமுக தனது வியூகத்தை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. ஆகவே எதிரணி என்ன செய்யப்போகிறது என நோட்டம் விடுவதில் திமுக கவனம் செலுத்த ஆரம்பித்து இருப்பதால், சுனிலின் வியூகம் டாப் கியரில் பாய்ச்சல் காட்டும் என நம்பிக்கையோடு  காத்திருக்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.