சுந்தர் சிக்கு டெல்லி தலைமை கொடுத்த வாக்குறுதியை அடுத்து குஷ்பு பாஜகவில் சேர சம்மதம் தெரிவித்ததாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த வாரம் சென்னை பெரம்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் ஆர்பாட்டத்தில் பங்கேற்று பேசிய போது கூட பிரதமர் மோடியை மிக கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார் நடிகை குஷ்பு. செய்தியாளர்களை சந்திக்கும் திராணி பிரதமர் மோடிக்கு இல்லை என்று குஷ்பு பேசிய பேச்சில் அனல் பறந்தது. ஆனால் இப்படி பேசி ஒரு வாரம் கூட முடிவடையாத நிலையில் பிரதமர் மோடியால் தான் நாட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்ல முடியும் என்று கூறி பாஜகவில் இணைந்துள்ளார் குஷ்பு. இதற்கான காரணம் குஷ்புவின் கணவர் சுந்தர் சி தான் என்று சொல்கிறார்கள்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு நடிகை குஷ்பு – காங்கிரஸ் இடையிலான உறவு அத்தனை சுமூகமாக இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். கடந்த 2014ம் ஆண்டு காங்கிரசில் சேரும் போது எம்பி பதவி என்கிற ஒரே ஒரு நிபந்தனை தான் குஷ்பு விதித்தது என்கிறார்கள். ஆனால் சட்டமன்ற உறுப்பினர் ஆனால் கூட போதும் என கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கேட்டு குஷ்பு காத்திருந்தார். ஆனால் அவருக்கு அந்த தேர்தலில் மட்டும் அல்ல கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் மேலிடம் சீட் கொடுக்கவில்லை.

இதன் பிறகு குஷ்பு தனக்கு ராஜ்யசபா பதவி கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தார். ஆனால் அதற்கான வாய்ப்பு இல்லை என்பது தெரிந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் முதலே குஷ்பு பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி வந்தது. வழக்கம் போல் இவற்றை எல்லாம் வதந்தி என்று குஷ்பு கூறி வந்தார். இந்த நிலையில் தமிழக பாஜக தலைவல் எல்.முருகனை கடந்த வாரம் குஷ்புவின் கணவரும் பிரபல இயக்குனருமான சுந்தர் சி சந்தித்து பேசினார். இதன் பிறகு குஷ்பு பாஜகவில் இணைய உள்ளதாக மீண்டும் தகவல்கள் பரவின.

அந்த தகவல்கள் உண்மை என்று கூறும் வகையில் குஷ்பு டெல்லியில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்துள்ளார். தற்போது குஷ்பு ஏன் திடீரென பாஜகவில் இணைந்தார் என்கிற கேள்விகள் எழுந்தன. காங்கிரசில் தனக்கு மதிப்பில்லை என்று தெரிந்ததால் அந்த கட்சியில் இருந்து விலகிவிட்டதாக குஷ்பு கூறுகிறார். ஆனால் கடந்த வாரம் பெரம்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் குஷ்புவுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது.

காங்கிரஸ் கட்சியில் உறுதியுடன் இருந்த குஷ்பு, அவரது கணவர் சுந்தர் சி பாஜக தமிழக தலைவர் எல்.முருகனை சந்தித்த பிறகு தான் டெல்லி சென்று அந்த கட்சியில் இணைந்துள்ளார். மேலும் காங்கிரஸ் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி கூட சுந்தர் சி தான் குஷ்புவை மூளைச் சலவை செய்து பாஜகவில் சேர்த்துள்ளதாக வெளிப்படையாகவே கூறுகிறார். இதைப்பற்றி விசாரித்த போது குஷ்பு – சுந்தர் சி இணைந்து நடத்தி வரும் அவ்னி கிரியேசன்ஸ் நஷ்டத்தில் இயங்குவதாக சொல்கிறார்கள்.

சுந்தர் சி எடுத்த ஒரு சில படம் கொடுத்த நஷ்டத்தால் அவருக்கு பெரும் கடன் ஏற்பட்டுள்ளதாகவும் சொல்கிறார்கள். இதனை எல்லாம் சரி செய்வதாக பாஜக மேலிடம் கொடுத்த வாக்குறுதியை அடுத்தே சுந்தர் சி எல்.முருகனை சந்தித்து பேசியதாக சொல்கிறார்கள். இந்த விவகாரத்தில் குஷ்பு முதலில் பிடிவாதம் காட்டியதாகவும் பிறகு பாஜகவில் இணைய சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.  மேலும் காங்கிரசில் இருந்தது போலவே பாஜகவிலும் குஷ்புவுக்கு அகில இந்திய செய்தி தொடர்பாளர் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.