காங்கிரஸ் கட்சியிலிருந்து நடிகை குஷ்பு விலகி, பாஜகவில் சேர்ந்தததற்கு அவருடைய கணவர் சுந்தர் சியின் அழுத்தமே காரணம் என காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
போன வாரம் வரை பாஜகவையும் பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்துவந்த நடிகை குஷ்பு, திடீரென பாஜகவில் ஐக்கியமாகிவிட்டார். குஷ்பு பாஜகவில் இணைவது பற்றி கடந்த ஓரிறு மாதங்களாகவே தகவல்கள் வெளியானாலும் குஷ்புவின் கணவரும் இயக்குநருமான சுந்தர் சி தமிழக பாஜக தலைவர் எல்.முருகனை சந்தித்து பேசியதாகவும் வெளியான தகவல்களுக்கு அது சூடுபிடித்தது. தற்போது குஷ்பு பாஜகவில் இணைந்ததற்கு அவருடைய அழுத்தமே காரணம் என்று காங்கிரஸ் தலைவர்கள் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ள பதிவில், “குஷ்பூ சுந்தர் பா.ஜ.க.வில் சேருவதற்கு அவரது கணவர் சுந்தர் சி. நிர்ப்பந்தம் காரணம் என்று கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சியில் இருந்த குஷ்பூ மூளை சலவை செய்யப்பட்டு, இன்று அவர் ஏற்றுக் கொண்ட கொள்கைக்கு நேர் எதிரான கொள்கை கொண்ட பா.ஜ.க.வில் இணைந்துள்ளார். இதன்மூலம் நீண்டகாலமாக அவர் ஏற்றுக் கொண்ட கொள்கையை பா.ஜ.க.விடம் அடகு வைத்திருக்கிறார்.” என்று தெரிவித்துள்ளார்.


குஷ்பு பாஜகவில் சேர சுந்தர்.சி-யின் அழுத்தமே காரணம் என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறியுள்ள நிலையில், குஷ்புவை பாஜகவில் தள்ளும் அளவுக்கு சுந்தர்-சிக்கு என்ன அழுத்தம் ஏற்பட்டது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
