கன்னட நடிகரும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான மறைந்த அம்பரீஷ் மனைவியான நடிகை சுமலதா பாராளுமன்ற தேர்தலில் மாண்டியா தொகுதியில் போட்டியிட விரும்புகிறார்.

ஆனால் மாண்டியா தொகுதியை காங்கிரஸ் கூட்டணியில் உள்ள முதல்வர் குமாரசாமி கட்சியான ஜே.டி.எஸ். கட்சிக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.

மாண்டியா தொகுதியில் குமாரசாமியின் மகன் நிகில் போட்டியிடுகிறார். இதனால் சுமலதாவிடம் வேறு தொகுதியில் போட்டியிடுமாறு சித்தராமையா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள் கோரிக்கை விடுத்தும் அதை சுமலதா ஏற்கவில்லை.

நேற்று மாண்டியா தொகுதியில் சுமலதா தனது மகனுடன் சென்று தொகுதி முழுக்க ஆதரவு திரட்டினார். பின்னர்  செய்தியர்களிடம் பேசிய அவர், நாடாளுமன்ற தேர்தலில் மாண்டியா தொகுதியில் கண்டிப்பாக போட்டியிடுவேன். மாண்டியா மாவட்டத்தின் அனைத்து காங்கிரஸ் பிரமுகர்களும், அம்பரீஷ் ரசிகர்களும் எனக்கு ஆதரவு தந்து பக்கபலமாக இருந்து வருகிறார்கள்.

எனவே நான் தேர்தல் களத்தில் இருந்து பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை. இந்த தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுவது உறுதி என கூறினார்.

இதனிடையே சுமலதாவை கர்நாடக முன்னாள் துணை முதல் அமைச்சரும், , பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவருமான அசோக் சந்தித்து பேச இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. மேலும் சுமலதாவுக்கு ஆதரவு கொடுக்க பா.ஜனதா முடிவு செய்து உள்ளதாக கூறப்படுகிறது.