வேகமெடுக்கும் சுகேஷ் சந்திரசேகர் வழக்கு..! ஏடா கூடமாய் சிக்கிய டிடிவி தினகரன்..!
கடந்த 2017ம் ஆண்டு அதிமுக இரண்டாக உடைந்த போது இரட்டை இலை சின்னத்தை தன் அணிக்கு பெற டிடிவி தினகரன் முயற்சி மேற்கொண்டார். அப்போது தேர்தல் ஆணையத்தில் தனக்கு உள்ள தொடர்பகள் மூலமாக இரட்டை இலை சின்னத்தை பெற்றுத் தருவதாக சுகேஷ் சந்திரசேகர் டிடிவி தினகரனை அணுகியதாக கூறுகிறார்கள்.
இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்றது தொடர்பான வழக்கை சிபிஐ மறுபடியும் தூசி தட்டியுள்ள நிலையில் அமலாக்கத்துறையும் இந்த வழக்கில் நடவடிக்கையை துவங்கியுள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு அதிமுக இரண்டாக உடைந்த போது இரட்டை இலை சின்னத்தை தன் அணிக்கு பெற டிடிவி தினகரன் முயற்சி மேற்கொண்டார். அப்போது தேர்தல் ஆணையத்தில் தனக்கு உள்ள தொடர்பகள் மூலமாக இரட்டை இலை சின்னத்தை பெற்றுத் தருவதாக சுகேஷ் சந்திரசேகர் டிடிவி தினகரனை அணுகியதாக கூறுகிறார்கள். அப்போது இதற்காக சில கோடிகள் கைமாறியுள்ளன. ஆனால் அந்த சமயத்தில் டிடிவி தினகரனை உள்ளிட்ட அதிமுகவினரை உளவுத்துறை தீவிரமாக கண்காணித்தது.
இதனை அடுத்து டெல்லியில் வைத்து சுகேஷ் சந்திரசேகரை கைது செய்த போலீசார் அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தினகரனையும் கொத்தாக அள்ளிச் சென்று திகார் சிறையில் அடைத்தது. சுமார் ஆறு மாதங்களுக்கு பிறகு வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த தினகரன் அந்த வழக்கில் இருந்து கிட்டத்தட்ட தப்பிவிடும் அளவிற்கு தான் விசாரணை நடைபெற்று வந்தது. ஆனால் திடீர் திருப்பமாக, சுகேஷ் சந்திரசேகர் தொடர்புடைய பண்ணை வீட்டில் ரெய்டு போன மத்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்த சில ஆவணங்கள் டிடிவி தொடர்புடையவை என்கிறார்கள்.
தற்போது டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுகேஷ் தன்னுடன் சிறையில் உள்ள தொழில் அதிபர் ஒருவரை ஜாமீனில் விடுதலை செய்ய உதவி செய்வதாக கூறி அவரது மனைவியை தொடர்பு கொண்டுள்ளார். இது குறித்து சுமார் 3 கோடி ரூபாய் வரை சுகேஷ் பேரம் பேசிய நிலையில், அது மோசடியாக இருக்கலாம் என கருதி தொழில் அதிபரின் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தொழில அதிபர் மனைவிக்கு வந்த செல்போன் எண்ணை ட்ரேஸ் செய்த போது அது டெல்லி திகார் சிறையில் இருந்துள்ளது. இதனை அடுத்து சிறைக்கு சென்ற போலீசார் சுகேசின் ஆப்பிள் ஐபோனை பறிமுதல் செய்தனர்.
அந்த ஐ போனை ஆய்வு செய்த போது தான் சென்னை நீலாங்கரையில் அவனுக்கு சொகுசு பங்களா இருப்பதை தெரிந்து கொண்டனர். அத்துடன் அங்கு நடத்திய ரெய்டை தொடர்ந்து சுமார் 40 கோடி ரூபாய் மதிப்புடைய சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அத்துடன் வீட்டில் இருந்து கிடைத்த சில சொத்து ஆவணங்கள் அமலாக்கத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அவற்றை ஆய்வு செய்த போது சில வரவு, செலவு விவரங்கள் டிடிவி தினகரனை சிக்க வைக்கும் அளவிற்கு வில்லங்கமாக இருப்பதை தெரிந்து கொண்டுள்ளனர்.
ஏற்கனவே இரட்டை இலை வழக்கில் தினகரனுக்கு எதிராக போதிய ஆதாரம் இல்லை டெல்லி போலீசார், குற்றப்பத்திரிகையில் அவர் பெயரை சேர்க்கவில்லை. ஆனால் தற்போது சுகேஷ் வீட்டில் கிடைத்துள்ள ஆவணங்கள் மூலம் நிச்சயம் டிடிவி தினகரன் மீது புதிதாகவே வழக்கு தொடர முடியும் என்றும் இந்த முறை அமலாக்கத்துறையே கூட வழக்கு தொடரலாம் என்று கூறிக் கொள்கிறார்கள். இதனால் சுகேஷ் மூலமாக வந்துள்ள வில்லங்கத்தை சமாளிப்பது எப்படி என தினகரன் மறுபடியும் ஆலோசனையை துவங்கியுள்ளார்.