ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு, ரயில் மூலமாக குடிநீர் கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் முழுவதுமாக நிறைவடைந்த நிலையில் திடீரென குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து, காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் உபரி நீரானது,  ரயில் மூலமாக சென்னைக்கு கொண்டு வரப்படும் என கடந்த மாதம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்த போதும், அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றன.

அதன்படி, ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை வில்லிவாக்கத்திற்கு, ரயில் மூலமாக தண்ணீர் கொண்டு வரப்பட இருந்தது. 65 கோடி ரூபாய் மதிப்பில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தினமும் ஒரு கோடி லிட்டர் தண்ணீர் வில்லிவாக்கத்துக்கு கொண்டுவரப்பட்டு அதன்பின்னர், கீழ்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு சுத்திகரிப்பு பணிகள் நிறைவடைந்ததும் வட சென்னை மற்றும் மத்திய சென்னை பகுதி மக்களுக்கு தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது.

இதற்காக கடந்த 2 வாரங்களாக இரவு, பகல் பாராமல் குழாய்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்றன. வேலூர் மாவட்டம் மேட்டு சக்கரகுப்பத்தில் இருந்து ஜோலார்பேட்டை வரை 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதனை தொடர்ந்து காலை 10 மணிக்கு, ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு, ரயில் மூலமாக குடிநீர் கொண்டு வருவதற்கான சோதனை ஓட்டம் நடைபெற இருந்து. 12- ம் தேதி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இத்திட்டத்தை தொடங்கி வைக்க இருந்தார். ஆனால் எதிர்பாராத விதமாக தண்ணீர் கொண்டு வரப்பட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தத் திட்டம் தாமதாமகும் என கூறப்படுகிறது.