இந்து மதத்துக்கு அரணாக இருந்தால், நடிகர் ரஜினிகாந்துக்கு உதவி செய்வேன் என்று பாஜக மூத்த  தலைவர் சுப்ரமணியன் சாமி தெரிவித்துள்ளார்.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி மக்கள் இயக்க மாவட்ட செயலாளர்களை நடிகர் ரஜினி இன்று சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்புக் கூட்டத்தில் 37 மாவட்ட செயலாளர்கள் கலந்துகொண்டனர். இந்தச் சந்திப்பின்போது மன்ற வளர்ச்சி குறித்தும் கட்சித்  தொடங்குவது குறித்தும், நடிகர் கமல்ஹாசனோடு இணைந்து செயல்படுவது குறித்தும் ரஜினி ஆலோசனை நடத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
இந்தச் சந்திப்புக் கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, “பரஸ்பரம் தகவல்களைப் பரிமாறிக்கொண்டோம். என்னிடம் பல கேள்விகள் கேட்டனர்.  நான் அளித்த பதிலில் ரசிகர்கள் திருப்தி அடைந்தனர். ஒரே விஷயம் மட்டுமே எனக்கு ஏமாற்றமாக இருந்தது. அது என்ன என்பதை பிறகு சொல்கிறேன்” என்று ரஜினி தெரிவித்தார். இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு பிறகு ரஜினி கட்சி தொடங்கும் தேதியை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதுபற்றி எந்தத் தகவலும் வெளியாகவில்லை.


இந்நிலையில், காஞ்சிபுரத்தில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த சுப்ரமணியன் சாமி, “நடிகர் ரஜினி முதலில் அரசியலுக்கு வரட்டும். அவர் இந்து மதத்துக்கு அரணாக இருந்தால், அவருக்கு கட்டாயம் உதவி செய்வேன்” என்று தெரிவித்தார்.