ஸ்டாலின் உறுமினால் பயந்து பதுங்கும் பூனையாக தமிழக பாஜக..! அண்ணாமலையை கலாய்க்கும் சுப்பிரமணியன் சாமி
தமிழ்நாட்டில் நான் மட்டும் தான் திமுகவை எதிர்ப்பதுபோல் உள்ளது. ஸ்டாலின் உறுமினால் பயந்து பதுங்கும் பூனையாக தமிழ்நாடு பாஜக உள்ளதாக சுப்பிரமணியன் சாமி தெரிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக-பாஜக மோதல்
தமிழகத்தில் திமுக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் அதிமுக விட பாஜக திமுகவிற்கு கடும் போட்டியாகவும் சவாலாகவும் உள்ளது. திமுக அரசின் செயல்பாடுகளை நாளுக்கு நாள் விமர்சித்தும், ஊழல் தொடர்பான புகார்களை கூறியும் வருகிறது. இதன் காரணமாக திமுக- அதிமுக இடையே இருந்த போட்டியானது தற்போது திமுக- பாஜக என்ற நிலை எடுத்து வருகிறது. தமிழக அரசின் செயல்பாடுகளை விமர்சிக்கும் அண்ணாமலை தமிழக ஆளுநரிடம் புகார் பட்டியலையும் அவ்வப்போது அளித்து வருகிறார். மின்சாரத் துறையில் டெண்டர் வழங்கியதில் முறைகேடு, முதலமைச்சர் துபாய் பயணத்தில் முறையீடு, பெண்களுக்கு ஊட்டச்சத்து வழங்குவதில் முறைகேடு, என ஒன்றன்பின் ஒன்றாக புகார் கூறி வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழகம் முழுவதும் திமுக அரசுக்கு எதிராக போராட்டங்களையும் நடத்தி வருகிறார்.
ஸ்டாலினுக்கு கடிதம் எழுதிய சுப்பிரமணியன் சாமி
இதற்கு திமுகவும் பதிலடி கொடுத்து வருகிறது. பல்வேறு நேரங்களில் பாஜகவின் கருத்திற்கு சவால் விடுத்தும் உள்ளது. மேலும் அவதூறான கருத்துகளை வெளியிட்டதற்காக பாஜக தலைவர்கள் மீது நீதிமன்றத்தில் நஷ்ட ஈடு வழக்கும், அவதூறு வழக்கும் தொடர்ந்துள்ளது. இந்தநிலையில் திமுக அரசின் செயல்பாடுகளை பொறுத்துக் கொள்ள முடியாமல் தான் ஒரு சிலர் மதத்தை வைத்து அரசியல் செய்வதாகவும் பாஜகவை முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்து இருந்தார்.
இந்த நிலையில் பாஜகவின் மூத்த தலைவரான சுப்பிரமணியசாமி கடந்த சில தினங்களுக்கு முன்பாக கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில், தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்து ஆலயங்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும் நீண்ட நாட்களாக தமிழகத்தில் இந்து ஆலயங்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் இவை அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 25 மற்றும் 26 எதிரானது என்றும் கூறியுள்ளார். சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை தொடர்ந்து தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்து ஆலயங்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
ஸ்டாலினை பார்த்து பயப்படும் பாஜக
தான் கூறியபடி முதல்வர் ஸ்டாலின் செய்யாவிட்டால் தமிழக அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடரப் போவதாகவும் சுப்பிரமணியசாமி எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் தமிழக பாஜகவை விமர்சிக்கும் வகையில் டுவிட்டர் பதிவு ஒன்றை சுப்பிரமணியன் சாமி வெளியிட்டுள்ளார். அதில் தமிழ்நாட்டில் நான் மட்டும் தான் திமுகவை எதிர்ப்பதுபோல் உள்ளது. ஸ்டாலின் உறுமினால் பயந்து பதுங்கும் பூனையாக தமிழ்நாடு பாஜக உள்ளது. சினிமா கலாசாரம் தமிழ்நாடு பாஜகவை சீரழித்துவிட்டது என சுப்பிரமணியசாமி கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்
G-20 ஆலோசனைக்கூட்டம்..! அதிமுகவிற்கு அழைப்பு..! மோடிக்கு நன்றி தெரிவித்து மகிழ்ச்சி அடைந்த எடப்பாடி