தி.மு.க. தலைவர் கருணாநிதி, தயாநிதி மாறன், கலாநிதி மாறன் சகோதரர்களை வம்புக்கு இழுக்கும் வகையில் பாரதிய ஜனதா எம்.பி.சுப்பிரமணிய சாமி டுவிட்டரில் கருத்துத் தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு பிரச்சினை தொடங்கியதில் இருந்து தமிழர்களை பொறுக்கி என்றும், இளைஞர்கள், மாணவர்களை கிண்டல் செய்தும்சுப்பிரமணிய சாமி டுவிட்டரில் கருத்து தெரிவித்து வந்தார். நடிகர் கமல் ஹாசனிடமும் அவதூறு பேசி ,வம்பு இழுத்தார் சாமி.

தமிழக அரசியலில் குழப்பமான நிலை நீடித்து, அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா முதல்வராக வர கடும் எதிர்ப்பு நிலவியது. அப்போது,சசிகலா தான் முதல்வராக வர வேண்டும் என சுப்பிரமணியசாமி ஆதரவு கொடுத்தார்.

இந்நிலையில், டுவிட்டரில் சுப்பிரமணிய சாமி தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மாறன் சகோதரர்களை அவதூறாக பேசி கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது-

சசிகலாவைக் காட்டிலும், தி.மு.க. தலைவர் கருணாநிதியும், மாறன் சகோதரர்களும் மிகப்பெரிய கிரிமினல்கள். இவர்கள் சர்வாதிகாரி முசோலினியையே தோற்கடித்து விடுவார்கள். ஹிட்லரையும் தோற்கடித்து விடுவார்கள். ஊழல்வாதிகளை ஒழிக்க வேண்டும் என்ற என் இலக்கு இன்னும் முழுமை அடையவில்லை. என்று தெரிவித்துள்ளார்.

மற்றொரு டுவிட்ட் செய்தியில், “ மு.க. ஸ்டாலின் மருமகனும், தயாநிதி,கலாநிதி மாறன் சகோதரர்களும் வேலையில்லாத 100 இளைஞர்களை வேலைக்கு எடுத்துள்ளனர். அவர்களுக்கு ஒரு டுவிட் செய்ய ரூ. 200 சம்பளம் கொடுத்து, அவதூறு கருத்துக்களை பரப்பவிட்டுள்ளனர். இந்த செய்தியை கேட்கும்போது மிகவும் வருத்தமாக இருக்கிறது'' எனத் தெரிவித்துள்ளார்.