திராவிட இயக்க கொள்கைகளை தீவிரமாக பின்பற்றுபவர் சுப.வீரபாண்டியன். திராவிட இயக்க தமிழர் பேரவை என்ற அமைப்பை நிறுவிய சுப.வீரபாண்டியன், பெரியாரின் பகுத்தறிவு கொள்கைகளை தீவிரமாக பின்பற்றுவது மட்டுமல்லாது, தனது பேச்சு மற்றும் எழுத்துக்களின் மூலம் பரப்பிவருபவர் சுப.வீரபாண்டியன். 

இந்நிலையில், சுப.வீரபாண்டியன் இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். சிலர் தனக்கு இரவு பகலாக தொடர்ச்சியாக ஃபோன் செய்து தொந்தரவு செய்வதாகவும் ஃபோன் கால்களை எடுக்கவில்லையென்றால், வாட்ஸ் அப்பில் திட்டி மெசேஜ்களை அனுப்புவதாகவும், அதற்கான ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளார். வலதுசாரி சிந்தனையாளரான மாரிதாஸின் தூண்டுதலின் பேரில்தான் தன்னை சிலர் தொல்லை செய்வதாகவும் சம்மந்தட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் கோரியுள்ளார். 

சுப.வீயை தொடர்புகொள்பவர்கள், நீங்க வெறும் சுப.வீயா இல்ல ஓசிசோறு சுப.வீயா என்று கேட்டு சிலர் தொல்லை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் வேதனையடைந்த சுப.வீரபாண்டியன், ஃபோனை சுவிட்ச் ஆஃப் செய்து வைத்திருப்பதாக கூறியுள்ளார். அந்தளவிற்கு தொல்லை செய்தார்களாம். இதுவரை தனது அரசியல் வாழ்க்கையில், இவ்வளவு மோசமான தாக்குதல்களை, தான் எதிர்கொண்டதில்லை என்று சுப.வீரபாண்டியன் வருத்தம் தெரிவித்துள்ளார். 

ஓசிசோறு என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியை, அழகிரியின் மகன் விமர்சித்திருந்தார். இதையடுத்து ஓசிசோறு வீரமணி என்று வீரமணி ட்ரோல் செய்யப்பட்டார். அப்போது முதல் ஓசிசோறு என்ற வார்த்தை மிகப்பிரபலமானது. இந்நிலையில், திராவிட கொள்கைகளை தீவிரமாக பின்பற்றும் சுப.வீரபாண்டியன் மீதும் ஓசிசோறு என்று விமர்சிக்க தொடங்கிவிட்டனர். 

கந்தசஷ்டி கவசத்தை பற்றி ஆபாசமாக கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் சுரேந்திரன் என்பவர் பேசி வெளியிட்ட வீடியோ சர்ச்சையாகி, அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்துக்கள் மனதை புண்படுத்திய அந்த சம்பவம், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதன் பின்னணியில் தான் இருப்பதாக மாரிதாஸ் கிளப்பிவிடுவதாக சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.