நடிகர் ரஜினிகாந்த் அழைத்த உடன் ஆர்வமுடன் சென்ற ஏசி சண்முகம் ஒரு மணி நேரத்திற்கு பிறகு மிகுந்த ஏமாற்றத்துடன் தான் திரும்பி வந்துள்ளார் என்கிறார்கள்.

கொரோனா பரவத் தொடங்கிய பிறகு நடிகர் ரஜினி தனது போயஸ் கார்டன் வீடு, கேளம்பாக்கம் பண்ணை, நடிகர் தனுஷின் வீடு, மகள் சவுந்தர்யா வீடு என்று நான்கு இடங்களை தவிர வேறு எங்கும் செல்வதில்லை. குடும்பத்தில் கூட மிக மிக நெருக்கமான உறவினர்களை மட்டுமே ரஜினி சந்தித்து வருகிறார். இதற்கு காரணம் அவரது உடல் நிலை என்கிறார்கள். ஏற்கனவே அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை சிங்கப்பூரில் நடைபெற்றுள்ளது. இதனால் இயல்பாகவே ரஜினிக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவு.

தனக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிட்டதாக ரஜினியே வெளிப்படையாக கூறியுள்ளார். கொரோனா தாக்குதலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் தான் எளிதாக இலக்காவதால் ரஜினி வீட்டை தாண்டவில்லை. படப்பிடிற்கு மத்திய அரசு, மாநில அரசு அனுமதி அளித்தும் கூட ரஜினி அண்ணாத்த படப்பிடிப்பில் பங்கேற்க மறுத்து வருகிறார். ஏற்கனவே தீபாவளிக்கு திட்டமிடப்பட்ட அண்ணாத்த படம் தற்போது பொங்கலுக்கு தள்ளிப் போயுள்ளது- படத்தின் பல்வேறு பணிகள் முடிவடைந்த நிலையில் ரஜினி தொடர்புடைய சில காட்சிகள் மட்டுமே உள்ளன.

ஆனால் கொரோனா அச்சத்தால் படப்பிடிப்பை ரஜினி தள்ளிப்போட்டுக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தேர்தலுக்கு ஆறு மாதம் மட்டுமே உள்ள நிலையில் நவம்பரில் ரஜினி கட்சி ஆரம்பிப்பார் என்று ஆகஸ்ட் மாதமே தகவல்கள் பரவ ஆரம்பித்தன. ஆனால் ரஜினி அது தொடர்பாக வழக்கம் போல் மவுனமாகவே இருந்து வருகிறார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்னர் தமிழருவி மணியனை அழைத்து ரஜினி பேசியிருந்தார். தற்போது தனது நண்பரும் புதிய நீதிக்கட்சி தலைவருமான ஏசி சண்முகத்தை அழைத்து பேசியுள்ளார். இந்த இரண்டு சந்திப்புகளுமே அரசியல் தொடர்புடையது தான்.

தமிழருவி மணியன் உடனான சந்திப்பின் போது தனது உடல் நிலை குறித்து ரஜினி மிகவும் கவலைப்பட்டு பேசியதாக சொல்கிறார்கள். அதே போல் ஏசி சண்முகத்திடமும் தனது உடல் நிலை தொடர்பாகவே ரஜினி கவலை தெரிவித்ததாக கூறுகிறார்கள். கொரோனா சூழலில் படப்பிடிப்பில் பங்கேற்க முடியாத நிலையில் எப்படி அரசியல் கட்சி சாத்தியம் என்பது தான் இந்த இரண்டு சந்திப்புகளின் போதும் ரஜினி எழுப்பிய கேள்வி. ஆனால் நீங்கள் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் தேர்தல் பணிகளில் இறங்கலாம் என்றே  இருவரும் அறிவுரை கூறியதாக சொல்கிறார்கள்.

துவக்கத்தில் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து வந்த ஸ்டாலின் தற்போது மக்களுடன் மக்களாக இணைந்துவிட்டதையும் ரஜினியிடம் ஏசி சண்முகம் சுட்டிக்காட்டியதாக கூறுகிறார்கள். ஆனால் லதா இந்த விஷயத்தில் பிடிவாதமாக இருப்பதாகவும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடித்த பிறகு தான் ரஜினியை படப்பிடிற்கே அனுப்ப முடியும் என்று அவர் கறார் காட்டுவதாக பேசிக் கொள்வார்கள். இதனால் அரசியல் சுழலில் சிக்கியுள்ள ரஜினி எப்படி அதில் இருந்து வெளியே வருவது என்பது தெரியாமல் ஏசி சண்முகத்திடம் பேசியதாகவும், ஒரு மணி நேரம் பேசியும் இந்த விஷயத்தில் ரஜினியை ஏசி சண்முகத்தால் சமாதானம் செய்ய முடியவில்லை என்றும் கூறுகிறார்கள்.

சந்திப்பின் போது வழக்கமாக ஏசி சண்முகம் ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வார். ஆனால் இந்த முறை புகைப்பட கலைஞரை கூட வீட்டிற்குள் ரஜினி அனுமதிக்கவில்லை. இந்த அளவிற்கு கொரோன அச்சம் இருப்பதால் ரஜினியின் அரசியல் பிரவேசம் கானல் நீராக கூட போக வாய்ப்பு இருக்கிறதாம்.