பள்ளிக்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில் மாணவர்கள் உள்ளனர் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் 583 பால் உற்பத்தியாளர்களுக்கு தீபாவளி போனஸ் தொகையை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் கூடுதலாக 5 லட்சத்து 18 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். கும்பகோணம் பள்ளி தீ விபத்துக்குப் பிறகு, தனியார் பள்ளிகள் கட்டிட அனுமதி பெறவேண்டும் என்ற விதிமுறை உருவாக்கப்பட்டது. கட்டிட அனுமதி பெறாதவர்களுக்கு ஓராண்டுதான் அங்கீகாரம் வழங்க வேண்டுமென்றாலும், முதல்வரின் ஒப்புதலுடன் இரண்டாண்டுகள் அங்கீகாரம் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் வெளிப்படைத்தன்மையுடன் இதுவரை 2,512 தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களின் நிலையைக் கருத்தில் கொண்டு அவர்கள் இருப்பிடத்தின் அருகில் உள்ள பள்ளிகளில் சென்று கருத்து தெரிவிக்கலாம். மாணவர்கள்  பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ளனர்.

ஒருவேளை பள்ளிகளை திறக்க முடியாமல் சூழல் ஏற்பட்டால், பொதுத்தேர்வை எதிர்கொள்ளம் மாணவர்களுக்கு தொடர்ந்து சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மின்வெட்டு இல்லாத மாநிலமாக தமிழகம் திகழ்கிறது எனவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.