அடுத்த 2 நாட்களுக்கும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஆலையை முற்றுகையிட்டு கடப்பாரையால் இடித்துத் தள்ளுவோம் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள் கொந்தளித்துள்ளனர்.

தூத்துக்குடி மதுரை பைபாஸ் சாலையில்  அமைந்துள்ள ஸ்டெர்லைட் தாமிர ஆலையில் இருந்து ஆண்டுக்கு 4 லட்சம் டன் தாமிர உற்பத்தி நடைபெற்று வருகிறது. இங்கு கூடுதலாக 4 லட்சம் டன் தாமிர உற்பத்தி செய்யும் வகையில் ஆலை விரிவாக்கம் செய்ய பணிகள் நடந்தன. 

ஏற்கனவே ஸ்டெர்லைட் ஆலையால் பல்வேறு நோய் பாதிப்புகள், நிலத்தடி நீர், சுற்றுச்சூழல் மாசுபட்டு இருப்பதாக புகார்கள் கூறப்பட்ட நிலையில் ஆலை விரிவாக்கம் செய்ய தூத்துக்குடி பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவர்கள் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி போராட்டத்தில் குதித்தனர். 

அ.குமரெட்டியாபுரம் கிராமத்தில் கடந்த பிப்ரவரி மாதம் முதல்  54 நாட்களாக பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் அங்குள்ள மரத்தடியில் குடும்பத்துடன் அமர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்துகின்றனர். 

இந்த நிலையில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் அருகில் உள்ள மற்ற கிராமங்களுக்கும் பரவியது. ஆலையை சுற்றியுள்ள பண்டாரம்பட்டி, வடக்குசங்கரபேரி, மீளவிட்டான், தெற்கு வீரபாண்டியபுரம், மடத்தூர், சில்வர்புரம் ஆகிய  7 கிராம மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதனிடையே அ.குமரெட்டியாபுரம் கிராமத்தில் இன்று 54-வது நாளாக போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான ஆண்களும், பெண்களும் குழந்தைகளுடன் பங்கேற்றனர். ஸ்டெர்லைட் ஆலையை உடனே மூட வேண்டும், உயிரை காவு வாங்கும் நச்சு ஆலை தேவையில்லை என அவர்கள் கண்டன கோஷம் எழுப்பினார்கள். 

இந்த நிலையில் அ.குமரெட்டியாபுரம் கிராமத்தினர் ஸ்டெர்லைட் ஆலையை அகற்ற 2 நாட்கள் கெடு விதித்துள்ளனர். நாளை மாலைக்குள் ஸ்டெர்லைட் ஆலையை அகற்றுவது தொடர்பான அறிவிப்பை  வெளியிடாவிட்டால் ஆலையை முற்றுகையிட்டு கடப்பாறையால் இடித்துத் தள்ளுவோம் என தெரிவித்தனர்.