ஆங்கிலேயர் ஆட்சிக்கு பிறகு இந்தியாவில் தன் மக்களின் நெஞ்சுக்கு எதிராக அரசாங்கமே துப்பாக்கி பிடிக்கும் கொடுமைகள் ஏதோ ஒரு மாநிலத்தில் எப்போதாவது நடக்கத்தான் செய்கின்றன. இந்த சம்பவங்களின் போக்கில் ஆளும் அரசுகள் மிக கடுமையாக தேர்தலில் சரிவை சந்திப்பதும் இயல்புதான். தமிழகத்திலும் அது பலிக்க துவங்கியுள்ளது பதற்றமே இல்லாமல். நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலித்த இந்த துப்பாக்கி சூடும், அதன் கதறல்களுமான சத்தம் எதிர் வரும் சட்டமன்ற தேர்தலிலும் தொடர்வது உறுதியாகி இருக்கிறது என்கிறார்கள். ஏன்? எப்படி!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டமும், அதன் நூறாவது நாள் ஊர்வல களேபரத்தில் போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவமும் நிகழ்ந்தது. தேசம் தாண்டியும் தமிழக மற்றும் மத்திய அரசுக்கு எதிராக கொந்தளிப்புகள் உருவாகின இந்த விவகாரத்தில். இந்த சம்பவத்தை விசாரிக்க ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த கமிஷன் தனது விசாரணை அறிக்கையை சில நாட்களுக்கு முன் தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில் இருப்பதாக சொல்லப்படும் தகவல்கள் ஆளும் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ. வட்டாரத்தில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளன என்கிறார்கள். 
அப்படி அந்த அறிக்கையில் என்ன இருக்கிறதாம்?....

“துப்பாக்கிச் சூட்டுக்கு காரணமானவர்கள் என்று பதினெட்டு வயதில் இருந்து முப்பது வயதுக்குட்பட்ட பலரை போலீஸ் கைது செய்துள்ளது. பலர் நடுராத்திரியில் விசாரணை ஏதுமின்றி கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளனர். பல்வேறு வழக்குகள் அவர்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது. இளைஞர்களைக் கைது செய்ய விவகாரத்டில் காவல்துறையினர் சட்ட நடைமுறைகளைக் கடைப்பிடிக்கவில்லை. இதனால் பல இளைஞர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். ஆகவே நானூற்று இருபத்து எட்டு பேர் மீது பதிவு செய்யப்பட்ட இருநூற்று நாற்பத்து நான்கு வழக்குகளை அரசாங்கம் வாபஸ் வாங்க வேண்டும். வழக்கில் சிக்கிய இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவர்கள் குற்றமற்றவர்கள் என்று மாவட்ட நிர்வாகம் தடையில்லா சான்றிதழ் வழங்க வேண்டும். போலீஸ் தாக்குதலால் மன உளைச்சலுக்கு ஆளானவர்களுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் வரை நிதியுதவி வழங்க வேண்டும்.” என்றெல்லாம் பரிந்துரைகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. 

இந்த பரிந்துரையை ‘தீர்ப்பு’ என்றே சொல்லி கொண்டாடுகின்றனர் தூத்துக்குடி மக்களும், ஸ்டெர்லைட் எதிர்ப்பு தரப்பினரும். ஆனால் ‘அறிக்கையில் இப்படி இருக்குது, அப்படியிருக்குதுன்னு யாரோ வதந்தி கிளப்பிவிட்டிருக்காங்க. இந்த அறிக்கை ஒன்றும் தீர்ப்பு இல்லை.’ என்று போலீஸ் அதிகாரிகள் மறுத்துப் பேசுகிறார்கள். ஒருவேளை அறிக்கையில் உள்ளதாக பரவி இருக்கும் தகவல்களே உண்மையில் அந்த அறிக்கையில் இருந்தால், இந்த துப்பாக்கி சூடு சம்பவமானது தமிழக அரசுக்கும், அதை ஆட்டுவிக்கும் மோடி அரசுக்கும் எதிரான மிகப்பெரிய சம்மட்டி அடி! என்று புன்னகைக்கிறது தி.மு.க.