தமிழக அமைச்சர் யாராவது ஒருவர் ராமாயணம் பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்று ட்வீட் செய்தது உண்டா என  பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது, இது குறித்து தெரித்துள்ள அந்த அமைப்பு , இந்தியா என்கிற தனியான ஒரு உருவாக்கம் எதுவும் கிடையாது, மாநிலங்கள் தான் இந்தியா. இந்தியாவில் எந்த மாநிலத்தில் எந்த மாதிரியான பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அதை கையாள வேண்டியது மாநில அரசுகளின் பொறுப்பு.  ஒன்றிய அரசின் பணி என்பது, மக்கள் வரியாக கொடுக்கும் பணத்தை மாநிலங்களுக்கு பிரித்து அளித்துவிட்டு ஒன்றிய கட்டமைப்பிற்கென கொஞ்சம் பணத்தை வைத்துக்கொள்வது. பிரதமர் மோடி பதவியேற்றுக்கொண்ட சமயத்தில் வலியுறுத்தியதும்  கூட்டாட்சியை தான், அதாவது மாநிலங்களுக்கு இடையில் கூட்டுறவோடு இருக்கக்கூடிய "கூட்டாட்சி இந்தியா" என்றுதான் வலியுறித்தினார்.  ஆனால் சொல்வது ஒன்று செய்வது ஒன்று அவருக்கு புதிதல்ல.  

உலக கொள்ளை நோயாக உருவெடுத்திருக்கும் கொரோனாவை கையாளுவதில் கூட இந்திய அரசு தன்னுடைய ஆதிக்கத்தை வெளிப்படுத்துகிறது. "கார்ப்ரேட் விவகாரங்களுக்கான அமைச்சகம்" (corporate affairs ministry) வெளியிட்டுள்ள சுற்றறிக்கை இதற்கு நல்ல எடுத்துக்காட்டு.  பிரதமர் நிவாரண நிதி என்று பல ஆண்டுகளாக இருக்கும் போது எதற்காக "PM Cares" என்கிற கணக்கு துவக்கப்பட்டது என்கிற கேள்விகள் இருக்கும் சமயத்தில், அந்த கணக்கிற்கு அளிக்கப்படும் நன்கொடைகள் மட்டுமே "சிஎஸ்ஆர்" செலவாக கருதப்படும் என்று அறிவித்திருப்பது வெந்தபுண்ணில் வேல்பாய்ச்சுவது போல் உள்ளது. அந்த அந்த மாநில முதலமைச்சர்களும் அவர்களுடைய கணக்கிற்கு வரும் நன்கொடைகளுக்கும் இதுபொருந்த வேண்டும் என்கிற கோரிக்கையை நிராகரித்துள்ளது மத்திய அரசு. 

களத்தில் நின்று பணியாற்றுவது முதல்வர்களும் மாநிலங்களை சார்ந்த அமைச்சர்களும்தான். இதுவரை தமிழக அமைச்சர் யாரவது ஒருவர், "நான் ராமாயணம் பார்த்துக்கொண்டிருக்கிறேன் அல்லது மஹாபாரதம் பார்த்துக்கொண்டிருக்கிறேன்" என்று ட்வீட் செய்துள்ளதை பார்த்துள்ளோமா? ? ஆனால் ஒன்றிய அமைச்சர்கள் பலர் அப்படி ட்வீட் செய்து வருகின்றனர், அவர்களுக்கு அந்த அளவிற்கு வேலைகளோ பொறுப்போ இல்லாமல் உள்ளது. மாநிலத்தை ஆளும் முதல்வருக்கும், அமைச்சர்களுக்கும் அதிகமான பொறுப்புகள் இருக்கும் நேரத்தில், முதலவரின் நிவாரண நிதிக்கு அளிக்கப்படும் பணத்தை "சிஎஸ்ஆர்" நிதியாக கருதினால் எந்த விதத்தில் குறைந்து போவீர்கள்? உடனடியாக இதை நிறைவேற்றுங்கள் பிரதமர் அவர்களே...இல்லையேல் நீங்கள் மன்னிப்புக்கேட்க வேண்டிய காரணங்களை எண்ணுவதற்கு எண்கள் இல்லாமல் போய்விடும். என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.