நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்துக்கு ஆட்டோ சின்னம் வழங்க மாநில தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகிற பிப்ரவரி 19-ம் தேதி நடைபெறவிருக்கிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கிவிட்ட நிலையில், அரசியல் கட்சிகள் தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் தேர்வு எனத் தீவிரம் காட்டிவருகிறது.
21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் பிப்ரவரி 19-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. 12,838 பதவியிடங்களுக்கான நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் நேரடி தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். மொத்தம் 1,298 பதவியிடங்களுக்கு மார்ச் 4-ஆம் தேதி மறைமுகத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் மார்ச் 4ஆம் தேதி மேயர், நகர்மன்ற தலைவர்களை தேர்வு செய்வதற்கான மறைமுகத் தேர்தல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வார்டு உறுப்பினர்கள் மேயர்கள், தலைவர்கள், துணைத் தலைவர்களை மறைமுகமாக தேர்வு செய்ய உள்ளனர்.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு கணிசமான வெற்றிகளைப்பெற்ற விஜய்யின் மக்கள் இயக்கம், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் போட்டியிடுவதாக, கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதைத் தொடர்ந்து, விஜய் மக்கள் இயக்கம் சார்பாகத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்வு மற்றும் சின்னம் குறித்து பனையூரிலுள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில், மாவட்ட நிர்வாகிகளுடன் விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆலோசனை நடத்தினார்.

அந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய புஸ்ஸி ஆனந்த், `மக்கள் இயக்க நிர்வாகிகள் வரும் திங்கள்கிழமை வேட்புமனுத் தாக்கல் செய்யலாம். தேர்தலில் நம் இயக்கத்துக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்குமாறு மாநிலத் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை முன்வைத்திருக்கிறோம்" என்று பேசியிருந்தார்.
ஆனால், இந்த கோரிக்கையை நிராகரித்து பதில் கடிதம் அனுப்பியுள்ள மாநில தேர்தல் ஆணையம், இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருந்தால் மட்டுமே சின்னம் ஒதுக்க முடியும் எனத்தெரிவித்துள்ளது.

ரஜினிகாந்த் நடித்த சூப்பர் ஹிட் படமான பாட்ஷாவில் முக்கிய ரோலாக ஆட்டோ இடம்பெற்றிருந்தது. தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி கமர்ஷியல் ஹீரோவாக அறியப்படும் விஜயின் மக்கள் இயக்கத்துக்கு, உள்ளாட்சித் தேர்தலில் ஆட்டோ சின்னம் அளிக்கப்பட்டால், அது தங்களின் இயக்கத்துக்கு பெரிய பிளஸாக அமையும் என்று விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் ஆட்டோ சின்னம் வழங்க முடியாது என்று ஆணையம் அறிவித்துவிட்டதால் விஜய் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
ஆட்டோ பேமஸான ஒன்றும் கூட.எளிதில் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கலாம் என்று நினைத்துதான் ‘ஆட்டோ’ சின்னத்தை தளபதி தேர்ந்தெடுத்தார் என்று கூறுகின்றனர். வேட்டைக்காரன் படத்தில் ஆட்டோ ஓட்டுபவராக வருவார் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னொரு சுவாரஸ்யமான விஷயமும் இதில் இருக்கிறது.

சினிமாவில் எப்படி சூப்பர்ஸ்டார் ரஜினியை பின்பற்றுகிறாரோ நடிகர் விஜய், அதேபோல அரசியலிலும் அவரை பின்பற்றுகிறாரோ ? என்ற கேள்வியும் எழுந்து இருக்கிறது. அது என்னவென்றால், 2020இல் ரஜினி அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்லிய நேரம், பல்வேறு தகவல்கள் வெளியாகியது. ரஜினி தொடங்கவுள்ள கட்சியின் பெயர் 'மக்கள் சேவை கட்சி' என்றும், இந்தக் கட்சிக்கு ஆட்டோ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியிருப்பதாகவும் தகவல் வெளியானது.
இந்தத் தகவல் அப்போது தமிழகத் தேர்தலில் போட்டியிடவுள்ள கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சின்னம் குறித்த அறிவிப்பின் மூலம் தெரியவந்தது. பின்னர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என்று ஒதுங்கிவிட்டார். ஒருவேளை நான் ரஜினியை போலவே நானும் அரசியலுக்கு வருகிறேன் என்றும், ரஜினி வரவில்லை நான் அந்த இடத்துக்கு வருகிறேன் என்றும் உணர்த்துகிறாரோ என பல கேள்விகள் எழுந்து இருக்கிறது.

எம்.ஜி.ஆர்,ரஜினி ஆகியோரை திரையில் பின்பற்றி வரும் விஜய், அரசியலிலும் இவர்களது வழியை பின்பற்றுகிறாரோ என்றும் அரசியல் வட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ளது. எப்படி இருந்தாலும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் தன்னுடைய அரசியல் பயணத்தை முழுவீச்சில் தொடங்குவார் என்றும் கூறப்படுகிறது. தளபதி விஜயின் நிஜ ‘சர்க்கார்’ எப்படி என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
