எடப்பாடி அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது என்றும் எனவே நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிட வேண்டும் என ஆளுநரை வலியுறுத்தியதாகவும் மாநில காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். 

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இரண்டாக பிளவுபட்டு நின்ற அ.தி.மு.க பல மோதங்களுக்கும் பிறகு தற்போது மீண்டும் இணைந்துள்ளது. ஓபிஎஸ் துணை முதலமைச்சராக்கப்பட்டார். மேலும்  ஓபிஎஸ் அதிமுகவின் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும்  நியமிக்கப்பட்டார்.

அதே நேரத்தில் அதிமுகவில் இருந்து சசிகலாவையும், டி.டி.வி. தினகரனையும் நீக்க முடிவு செய்யப்பட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் கவர்னர் வித்யா சாகர் ராவை கடந்த 22-ந் தேதி நேரில் சந்தித்து, முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெறுவதாக கடிதம் கொடுத்தனர்.

இதனால் எடப்பாடி அரசு வெறும் 113 எம்.எல்.ஏக்களை மட்டுமே கொண்டு ஆட்சி நடத்தி வருகிறது. இதனால் எதிர்கட்சிகள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்கட்டும் என ஆளுநரை வலியுறுத்தி வருகின்றனர். 

இந்நிலையில், தன் மகளின் திருமண விழாவிற்கு ஆளுநரை அழைப்பு விடுக்க காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் ராஜ்பவன் சென்றார். அங்கு ஆளுநரை சந்தித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். 
அப்போது, மகளின் திருமணத்திற்கு அழைப்பு விடுத்தேன் எனவும், தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஆளுநரிடம் பேசினேன் எனவும், குறிப்பிட்டார். 

மேலும், எடப்பாடி அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது என்றும் எனவே நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிட வேண்டும் என ஆளுநரை வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார்.