ஆட்டிசம் மாணவர்கள் உயர் கல்வி படிக்க சிறப்பு வகுப்புகளை தொடங்க வேண்டும் என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.
ஆட்டிசம் மாணவர்கள் உயர் கல்வி படிக்க சிறப்பு வகுப்புகளை தொடங்க வேண்டும் என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆட்டிசம் என்பது மூளை வளர்ச்சியைப் பாதிக்கக் கூடிய, ஒரு நரம்பு சார்ந்த வளர்ச்சிக் குறைபாடு. இதனால், குழந்தைகள் பல விதங்களில் பாதிக்கப்படுகிறார்கள். தங்களுக்கான வேலைகளை செய்வதற்கு அவர்களுக்கு பிறரின் உதவி தேவைப்படும். ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்திருப்பதாலும், தொழில்நுட்பம் கை கொடுப்பதாலும் இப்போது, அவர்களுக்கான பள்ளிகள், காப்பகங்கள் வந்துள்ளன. முறையான பயிற்சிகள் மூலம் ஆட்டிசத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகளை, சமூகத்தில் சமநிலைக்கு கொண்டுவர முடியும். அதில் பல பெற்றோர்கள் போராடி வெற்றிபெற்றுள்ளனர். கோவை காளப்பட்டியைச் சேர்ந்த ஹரிஹரன் - சாந்தி தம்பதியினரின் மூத்த மகன் பாலாஜி. இவர் ஆட்டிசம் பாதிக்கப்பட்டு, பேசும் திறனின்றி இருக்கிறார்.
இதையும் படிங்க: https://tamil.asianetnews.com/politics/the-money-looted-by-the-ops-is-in-pondicherry-aiadmk-anpazhakan-interview-recjxh

ஆனாலும், அவர் தனது வேலைகளை தானே செய்யும் அளவுக்கு திறன் பெற்றுள்ளார். படிப்பிலும் சிறந்து விளங்குகிறார்.அவினாசி சாலையில் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ கணினி அறிவியல் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் பத்தாம் வகுப்பு வரை படிக்க, பல்வேறு சிறப்பு வசதிகள் உள்ளன. ஆனால், உயர் கல்வி படிக்க அவர்களுக்கு எந்த வசதியும் இல்லை என்று பாலாஜியின் பெற்றோர் வேதனை தெரிவித்துள்ளனர். பேசவே முடியாத பாலாஜியால், ஹால் டிக்கெட் விதிகளின்படி, பதில் சொல்லி, ஸ்கிரைப் தேர்வு எழுத முடியாது என, அவரது பெற்றோர் கூறியுள்ளனர். மாற்றுத்திறனாளிகள் ஸ்கிரைப் தேர்வு எழுத, உதவியாளரை அழைத்துச் செல்லலாம் என, பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.) அனுமதி அளித்துள்ளது. ஆனால், ஸ்கிரைப் தேர்வு எழுத, உதவியாளரை அழைத்துச் செல்ல அனுமதிப்பதில்லை என, பெற்றோர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: என்னா வெறுப்பு.. என்னா பேச்சு... கல்யாண ராமனை சுத்துப் போட்ட கோர்ட்.. போலீசுக்கு போட்ட அதிரடி உத்தரவு

எனவே, ஆட்டிசம் மற்றும் மாற்றுத்திறன் மாணவர்கள் ஸ்கிரைப் தேர்வு எழுத, அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தித்தர வேண்டும். அவர்களால் என்ன முடியுமோ, அதனைக் கொண்டே அவர்களிடம் தேர்வு நடத்தி, அவர்களின் திறனை மதிப்பிட வேண்டும். அதுபோல, ஆட்டிசம் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் உயர் கல்வி பெற, கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகளில் சிறப்பு வகுப்புகளை நடத்த வேண்டும். படிக்க விரும்பும், படிக்கும் தகுதி கொண்ட எந்தவொரு மாணவருக்கும், எந்தக் காரணத்தைக் கொண்டும் வாய்ப்பு கிடைக்காமல் போய்விடக் கூடாது. இதில், பெற்றோர்களின் வலியை அரசு உணர வேண்டும்.எனவே, தமிழக உயர் கல்வித் துறையும், தமிழக முதல்வரும் இதில் உடனடியாக தலையிட்டு ஆட்டிசம் மற்றும் மாற்றுத் திறனாளி மாணவர்கள் உயர் கல்வி படிப்பதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை களைய வேண்டும். அவர்களுக்கான சிறப்பு வகுப்புகளை தேவையான இடங்களில் உடனடியாக தொடங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
