ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த வரை தமிழ்நாட்டில் நீட் தேர்வு நுழைய முடியவில்லை என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சி பாஜகவுக்கு அடிமையாக இருப்பதால் நீட் தேர்வு தமிழகத்தில் நுழைந்திருப்பதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு கோரும் தமிழக அரசின் தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்க மறுக்கும் ஆளுநரை கண்டித்து ஆளுநர் மாளிகை முன்பு திமுகவின் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.  அதில் திமுக தலைவர் மு.கஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது ஆளுநரை கண்டித்து திமுகவினர் முழக்க மிட்டனர். பின்னர் ஸ்டாலின் மேடையில் பேசியதாவது:  தமிழகத்தில் நீட் தேர்வு என்பது பலிபீடமாக மாறிவிட்டது இதுவரை இந்த தேர்வால் 13 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துள்ளனர்.  நீட் தேர்வில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு சட்டமன்றத்தில் அமைச்சர்கள் கூடி நிறைவேற்றி அனுப்பிவைத்த தீர்மானத்திற்கு இதுவரை ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். 

அதிமுக அமைச்சர்கள் ஆளுநரை நேரில் சந்தித்தும்,  தான் ஆளுநருக்கு கடிதம் எழுதி வலியுறுத்தியும் ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்க மறுத்து வருகிறார். மாறாக 4 வார காலம் அவகாசம் தேவை என கூறியுள்ளார். ஏற்கனவே  40 நாட்கள் ஆகியும்  இந்த மசோதாவுக்கு  அவர் ஒப்புதல் அளிக்க மறுத்து வருகிறார். நான் சொல்கிறேன் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை சட்டப்பூர்வமாக ரத்து செய்த அனைத்து முயற்சிகளையும் நான் எடுப்பேன். ஆளுநரை பொறுத்தவரை மிகவும் சுறுசுறுப்பானவர்,  கவர்னராக பொறுப்பேற்ற உடனேயே தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்தவர் ஆளுநர், தமிழக முதலமைச்சர் எடப்பாடியா அல்லது பன்வாரிலால் புரோஹித்தா  என்று கேட்கக் கூடிய அளவில் அத்துமீறி சுற்றுப்பயடம் மேற்கொண்டவர் அவர். 

அப்படிப்பட்ட ஆளுநர்தான் இந்த  மசோதா மீது முடிவெடுக்காமல் இருக்கிறார். ஏன் இன்னும் முடிவெடுக்கவில்லை என எடப்பாடி பழனிச்சாமி கேட்க மாட்டார், அவர்கள் கேட்டாலும் கேட்காவிட்டாலும் இந்த ஸ்டாலின் அதை தட்டி கேட்பேன். அதேபோல தமிழக சட்டமன்றத்தில் சாந்தன் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்த தீர்மானம் நிறைவேற்றி  அனுப்பியும் அவர் அதில் என்ன முடிவெடுத்தார்.?  தமிழக அரசு தீர்மானம் குறித்து  ஆளுநருக்கு  நான் எழுதிய கடிதத்திற்கு அவர் பதில் கடிதம் அனுப்பியுள்ளார் அதில் அவர் மூன்று அல்லது நான்கு வார காலம் அவகாசம் கேட்டுள்ளார். ஏற்கனவே 40 நாட்கள் கடந்துள்ளது இதில் கூடுதலாக 4 வார கால அவகாசம் கேட்டுள்ளது ஏதேச்சதிகாரம். இந்த தீர்மானத்திற்கு ஒப்புதல் அளித்தால் 303 அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவர்களாக முடியும், இல்லையென்றால் 8 பேர் மட்டும்தான் மருத்துவ படிப்பில் சேர முடியும். ஆளுநர் ஒப்புதல் அளிக்க அதிமுக அரசு நிர்ப்பந்திக்கிறதோ இல்லையே ஆனால் அவரை ஒப்புதல் அளிக்கவைக்க திமுக போராடும். 

ஜெயலலிதா மற்றும் கருணாநிதி இருந்தவரை தமிழகத்தில் நீட் நுழைய முடியவில்லை. என்ற அவர் இது முதற்கட்ட போராட்டம்தான், இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் வரை திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடும் என தெரிவித்தார்.