உண்மையிலேயே நீட் விவகாரத்தில் மாணவர்கள் மீது திமுகவுக்கு அக்கறை இருந்திருந்தால், நீட் விலக்க தங்களிடம் மேஜிக் ஃபார்முலா இருக்கிறது என்று இவர்கள் தேர்தல் பிரச்சாரத்தின் போது பம்மாத்து செய்திருக்க மாட்டார்கள்.
முதலமைச்சர் மு.க ஸ்டாலின் குல்லா அணிந்து கொண்டு கஞ்சி குடிக்க முடியும் என்றால், சர்ச்சுக்கு சென்று கேக் வெட்ட முடியும் என்றால் ஆளுநர் ஆர்.ரவி ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி என பேச முடியும் என்று யூடியூப்பர், பாஜக ஆதரவாளர் கிஷோர் கே.சாமி கூறியுள்ளார். குடியரசு தின விழா உரையில் ஆளுநர் ஆர்.என் ரவி ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி 130 கோடி இந்தியர்களின் நெஞ்சில் குடியிருக்கிறார் என ஆளுநர் பேசியதை பலரும் விமர்சித்து வரும் நிலையில் கிஷோர் கே.சாமி இவ்வாறு கூறியுள்ளார்.
தமிழக ஆளுநராக கடந்த செப்டம்பர் மாதம் 18 ஆம் தேதி ஆளுநர் ரவியை மத்திய அரசு நியமித்தது. முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான ரவி நியமிக்கப்பட்டபோதே திமுகவின் கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்டவை ரவியின் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தன. வடகிழக்கு மாகாணங்களில் ஆளுநராக இருந்த ஒருவரை குறிப்பாக காவல்துறை பின்புலம் கொண்ட ஒருவரை தமிழக ஆளுநராக நியமிப்பதில் உள்நோக்கம் உள்ளது என்றும், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இடையூறு செய்யவே ரவியை மத்திய அரசு தமிழகத்திற்கு ஆளுநராக நியமித்துள்ளது என திமுக கூட்டணி கட்சிகள் சந்தேகம் எழுப்பின.அத்துடன் ஆளுநர் ஆர்.என் ரவியின் நியமனத்தை திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

ஆனால் தமிழக முதல்வர் மரபுப்படி ஆளுநரை வரவேற்றார். சிறுதி காலம் ஆளுநருக்கும் முதல்வருக்குமான உறவு சுமூகமாகவே இருந்து வந்தது. ஆனால் ஆளுநர் தமிழக டிஜிபியை ஆளுநர் அழைத்து சட்ட ஒழுங்கு குறித்து பேசியதுடன், முன்னாள் முதல் அமைச்சர் அண்ணா பிறந்தநாளையொட்டி 500 கைதிகளை விடுதலை செய்ய திமுக அரசு அறிவித்த நிலையில், அந்த கைதிகளின் பின்னணி விவரங்களை ஆளுநர் டிஜிபியிடம் கேட்டது போன்ற விஷயங்களால் திமுகவுக்கும் ஆளுநருக்கும் இடையே உரசல் ஏற்பட்டது.
அதேநேரத்தில் ஆளுநர் ரவியை எதிர்க்கட்சி தலைவர்களான அதிமுகவும், பாஜகவும் ஆளுநர் மாளிகைக்கே சென்று அடிக்கடி சந்தித்தது திமுக அதன் கூட்டணி கட்சிகளுக்கும் எரிச்சலை ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியாகத்தான் குடியரசு தின விழா வாழ்த்து செய்தியில், ஆளுநர் ரவி நீட் தேர்வுக்கு முன் தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் 1 சதவீதத்துக்கும் குறைவாகவே அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்தனர், ஆனால் நீர் தேர்வுக்குப் பின் 7.5 சதவீத இட ஒதுக்கீடு காரணமாகவும் அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவ கல்லூரிகளில் சேருவது அதிகரித்துள்ளது என பேசினார். அவரின் இந்த பேச்சு திமுகவுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. ஆளுநரின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகதான் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் ஆளுநர் ரவியை மறைமுகமாக கண்டித்து கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா என்ற கட்டுரை வெளியானது. இந்நிலையில்தான் தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்றி அனுப்பி வைத்திருந்த நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் மீண்டும் தமிழக அரசுக்கே அனுப்பி வைத்தார். இது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

ஆளுநரின் இந்த நடவடிக்கையில் உள்நோக்கம் இருக்கிறது, ஆர்எஸ்எஸ் பாஜகவின் சித்தாந்தத்தை அவர் செயல்படுத்தி வருகிறார் என்றும், அதனால்தான் குடியரசு தின விழாவின்போது ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி 130 கோடி மக்களின் மனதிலும் இடம் பிடித்திருக்கிறார் என பேசினார் என ஆளுநரை பலரும் பல வழிகளில் விமர்சித்து வருகின்றனர். நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது ஆளுநருக்கு எதிரான விமர்சனத்தை அதிகரிக்கச் செய்துள்ளது. இந்நிலையில் பாஜக ஆதரவாளரும் யூடியூப்பருமான கிஷோர் கே.சாமி, ஆளுநர் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படிதான் நடந்து கொள்கிறார். மாநில அரசு அனுப்பி வைத்த மசோதா சட்டத்திற்கு எதிராக இருக்கும்பட்சத்தில் அதை திருப்பி அனுப்பும் அதிகாரம் ஆளுநருக்கு உள்ளது என கூறியுள்ளார். மேலும் அவர் இது குறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு கொடுத்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- நீட் தேர்வு மசோதாவை திருப்பி அனுப்புவதற்கு ஆளுநருக்கு எல்லா அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மாறாக திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆளுநர் ஒரு தபால்காரர் என்பதுபோல விமர்சித்து வருகின்றனர்.

அப்படிப்பட்டவர்கள் ஆளுநருக்கு இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அதிகாரத்தை அறிந்து கொள்ள அரசியலமைப்பு பிரிவு 200 வாசித்துப் பார்க்க வேண்டும். அதில், ஒரு தீர்மானம் சட்டத்திற்கு எதிராக இருந்தால் அதை திருப்பி அனுப்பும் அதிகாரம் ஆளுநருக்கு உள்ளது என கூறப்பட்டுள்ளது. உண்மையிலேயே நீட் விவகாரத்தில் மாணவர்கள் மீது திமுகவுக்கு அக்கறை இருந்திருந்தால், நீட் விலக்க தங்களிடம் மேஜிக் ஃபார்முலா இருக்கிறது என்று இவர்கள் தேர்தல் பிரச்சாரத்தின் போது பம்மாத்து செய்திருக்க மாட்டார்கள். இதேபோல் ஆளுநர் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி குறித்து பேசி விட்டார் என பலர் பொங்குகிறார்கள், ஸ்டாலின் முதலமைச்சராக இருந்து கொண்டு குல்லா அணிந்துக்கொண்டு கஞ்சி குடிக்கிறார், தேவாலயத்திற்குச் சென்று கேக் வெட்டுகிறார், முதலமைச்சர் ஆகிய ஸ்டாலினால் குல்லா போட்டுக் கொண்டு கஞ்சி குடிக்க முடியும் என்றால், கேக் வெட்ட முடியும் என்றால், ஆளுநராலும் ஸ்ரீ ராமமூர்த்தி என்று பேச முடியும். அவர்கள் இந்து மதத்தை சேர்ந்தவர் அவருடைய மதத்தை வழிபடுவதற்கு அவருக்கு உரிமை இருக்கிறது. அவர்களுடைய கடவுளை உச்சரிப்பதற்கு அவருக்கு உரிமை இருக்கிறது என்று கிஷோர் கே. சாமி கூறியுள்ளார்.
