இந்தியை திணிக்க நினைத்தால் சும்மா இருக்க மாட்டோம்… பாஜகவுக்கு எதிராக கொந்தளித்த ஸ்டாலின்…

இந்தி மொழிக்கு மட்டும் மகுடம் சூட்டிவிட்டு தமிழ் உட்பட மற்ற மொழிகளை மட்டம் தட்ட நினைத்தால் புதிய இந்தி எதிர்ப்பு போராட்டக் களத்தை சந்திக்க வேண்டியதிருக்கும் என்று பாஜக அரசுக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு பேராபத்தை  உருவாக்கும் வகையில் பாஜக அரசு,  தமிழகத்தில் உள்ள வேலூர், கிருஷ்ணகிரி மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளின் மைல் கற்களில் உள்ள ஆங்கில எழுத்துகளை அழித்துவிட்டு இந்தியில் எழுதி வருவதற்கு கடும் எண்டனம் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

தேசிய நெடுஞ்சாலை 75, 77 ஆகிய முக்கியச் சாலைகளின் வழியாக உள்ள மைல்கற்களில் இப்படி எழுதி இந்தி ஆதிக்கத்தைக் கொல்லைப்புற வழியாகத் தமிழகத்திற்குள் கொண்டு வர துடிப்பது தமிழர்களின் உணர்வுகளை கொஞ்சமும் மதிக்காத பாஜகவின் எண்ணத்தைக் காட்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.

1938ஆம் ஆண்டில் இந்தியைக் கட்டாய பாடமாக்கிய போது தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு போரின் முதல் களம் அமைந்தது. அதைத் தொடர்ந்து பல்வேறு களங்களைக் கடந்து, 1965ஆம் ஆண்டில் இந்தி ஆட்சி மொழிச் சட்டம் நடைமுறைக்கு வருமென்று அறிவித்த போது தமிழகம் முழுவதும் ஏற்பட்ட கிளர்ச்சி சரித்திரத்தின் ரத்த எழுத்துகளால் பொறிக்கப்பட்டுள்ளது என அந்த அறிக்கையில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தாய்மொழியாம் எங்கள் தமிழ் காக்க தங்கள் இன்னுயிரை நீத்தவர்களுக்கு இன்றுவரை மொழிப்போர் தியாகிகள் தினத்தை கொண்டாடி அவர்களின் உன்னத போராட்ட உணர்வுகளை இன்றைய இளைஞர்கள் மத்தியில் உயர்த்திப் பிடித்துக் கொண்டிருக்கும் இயக்கம் திமுக. ஆகவே இந்தி திணிப்பு எதிர்ப்பு இன்னும் தமிழகத்தில் முனைமழுங்கிப் போகவில்லை கனன்று கொண்டே இருக்கிறது என்பதை பாஜக அரசு உணர வேண்டும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு அளித்த 'இந்தி பேசாத மக்கள் விரும்புகிற வரையிலும் ஆங்கிலம் நீடிக்கும்' என்று உறுதிமொழியை மத்தியில் உள்ள பாஜக அரசு புறக்கணித்து தொடர்ந்து இந்தி திணிப்பில் ஈடுபடுவதை உடனே கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் ஆங்கிலத்தை அழித்து இந்தியை எழுதுவதை மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.