தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் , துரை முருகன், மா.சுப்ரமணியன் உள்ளிட்ட 7 திமுக எம்எல்ஏக்களும், காங்கிரஸ் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 10 பேர் ஆளுநரை சந்திப்பதற்காக கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்குள் சென்றுள்ளனர்.

முதலமைச்சர் பழனிசாமி மற்றும் பன்னீர் செல்வம் அணிகள் இணைந்த பின்னர், டிடிவி தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 21 பேர் முதலமைச்சருக்கு அளித்த ஆதரவை திரும்பப் பெற்றனர்.

இதனால், எடப்பாடி பழனிச்சாமி அரசு பெரும்பான்மை இழந்து விட்டது என கூறி, சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிருபிக்க உத்தரவிட வேண்டும் என்று கடந்த ஆகஸ்ட் மாதம் திமுக சார்பில் ஆளுநருக்கு கடிதம் எழுதப்பட்டிருந்தது.

மேலும், கடந்த 27 ஆம் தேதி, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத்தலைவர் துரைமுருகன் தலைமையில் திமுக எம்.எல்.ஏக்கள், எம்.பி. கனிமொழி ஆகியோர் ஆளுநரை நேரில் சந்தித்து தங்கள் தரப்பு கோரிக்கையை வலியுறுத்தினர்.

ஆனால், இதுவரை ஆளுநர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டு மு.க.ஸ்டாலின் கடிதம் அளித்ததாக தெரிகிறது. 

இதனையடுத்து, இன்று மு.க.ஸ்டாலின். துரைமுருகன், மா.சுப்ரமணியம், சேகர் பாபு, பொன்.முடி, தா.மோ.அன்பரசன், ஜெ.அன்பழகன், எ.வ.வேலு மற்றும் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற தலைவர் ராமசாமி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் எம்எல்ஏ அபு பக்கர் உள்ளிட்டோர் ஆளுநரை சந்தித்து பேசி வருகின்றனர்.