வாக்களிக்கும் உரிமை வட்டத்துக்குள் வந்துவிட்ட இளம் தலைமுறைக்கு ஸ்டாலினை ‘கருணாநிதியின் மகன், நடிகர் உதயநிதியின் அப்பா, தி.மு.க.வின் செயல் தலைவர்’ என்ற அளவில்தான் தெரியும். தமிழகத்தின் மிகப்பெரிய செல்வாக்குடையை அரசியல்  குடும்பத்தை சேர்ந்த மிக முக்கியமான ‘அங்கிள்’ என்று இளம் தலைமுறையினர் அவரை அறிந்து வைத்திருக்கலாம்.

ஆனால் அரசியல் இமயத்தின் சிகரம் தொடுவதற்காக அவர் ஏற துவங்கியபோது, அடிவாரத்தில் அவர் பட்ட அடிகளையும், எதிர்கொண்ட சித்ரவதைகளையும் பற்றி அவர்கள் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை.

1975-ல் தமிழகத்தில் ‘அவசர நிலை’யை பிரகடனப்படுத்தியது மத்திய அரசு. அப்போது இங்கே தி.மு.க. ஆண்டு கொண்டிருந்தது. பேச்சுச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட எல்லாமே முடக்கப்பட்டன. பிரதமர் இந்திராகாந்தி, நாடெங்கிலுமுள்ள தனது எதிர்கட்சிகளை எமெர்ஜென்ஸி எனும் ஆயுதம் கொண்டு விரட்டி விரட்டி ஒடுக்கிக் கொண்டிருந்தார். பலர் பயந்து முடங்கினர்.

ஆனால் தமிழகத்தில் தி.மு.க. இந்த சட்டத்தை மிக வன்மையாக கண்டித்தது. கருணாநிதி கட்சியின் செயற்குழுவை கூட்டி அவசரநிலை சட்டத்துக்கு எதிராக ஒரு தீர்மானத்தை போட்டார். மத்திய அரசு மண்டை காய்ந்தது. காரணம்? கூட்டணியிலிருக்கும் தி.மு.க. இப்படி எதிர்க்கிறதே என்பதே இந்திராவின் கோபம். கருணாநிதியுடன் பேசிப்பார்த்தது  மத்திய அரசு. ஆனால் அவர் மடியவில்லை. எதிர்ப்பு தொடர்ந்தது. விளைவு அதே ஆண்டு டிசம்பர் இறுதி நாளில் தி.மு.க.வின் ஆட்சியை டிஸ்மிஸ் செய்தது மத்திய அரசு.

அத்தோடு விடவில்லை, அடுத்தடுத்து தி.மு.க.வின் தளகர்த்தர்கள் கைது செய்யப்பட்டனர். முதல்வர் அதிகாரம் பறிக்கப்பட்ட ஒரு மணி நேரத்தில் கோபாலபுர இல்லத்தினுள் வந்தமர்ந்தார் கருணாநிதி. அவரை களைப்பு தீர சுவாசிக்க கூட விடவில்லை. வாசலில் வந்து நின்றது போலீஸ் படை. அவர்களைப் பார்த்து ‘என்ன விசேஷம்? நான் கைதாக வேண்டுமா?’ என்றார். ஆனால் அவர்களோ ‘இல்லை.

உங்கள் மகன் ஸ்டாலினை கைது செய்ய சொல்லி உத்தரவு.’ என்றார்கள். இதை சொல்லும்போது போலீஸ் அதிகாரிகளுக்கே குரல் உடைந்தது. ஆனால் கருணாநிதி கவலைப்படவில்லை. ’அவன் ஊரில் இல்லை. நாளை மாலைதான் வருவான். அப்போது, வாருங்கள்.’ என்றார். அவர்கள் நகர்ந்தார்கள்.
இந்த நேரத்தில் ஸ்டாலின் எங்கே இருந்தார் தெரியுமா? என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா?...

மதுராந்தகத்தில் ‘முரசே முழங்கு’ எனும் தலைப்பில் தி.மு.க. சார்பாக நாடகம் நடைபெற தயாராகி இருந்தது. அந்த நாடகத்தில் கலைஞராக நடிக்க இருந்தார் ஸ்டாலின். அதற்காக மேக்கப் போட்டுக் கொண்டிருந்தார். ஆட்சி கலைந்த சேதி எதுவும் அவருக்கு தெரியாமல், சக கலைஞர்களுடன் மேக்கப் போட்டுக் கொண்டிருந்தார்.

ஆட்சி பறிபோன தகவலை உதவியாளர்கள் வந்து தயக்கத்துடன் தளபதியிடம் சொல்லிவிட்டு, ‘உங்களை கைது செய்ய போலீஸ் தயாராகியுள்ளது.’ என்றனர் கண்ணீர் மல்க. சக நண்பர்களும், அந்த பகுதி தி.மு.க. நிர்வாகிகளும் ‘தம்பி நீங்க தலைமறைவாயிடுங்க. போலீஸை நாங்க பார்த்துக்குறோம்.’ என்றனர்.
ஆனால் மறுத்த ஸ்டாலின் ‘அப்படி செய்வது அவமான செயல். அப்பாவும் நிச்சயம் விரும்பமாட்டார். நான் சென்னைக்கு செல்கிறேன், கைதாகிறேன்.’ என்றபடி தயாரானார்.

அவசர நிலையில் கைதாகி சிறையில் அவர்  பட்ட அவஸ்தைகள் மரணத்துக்கு நிகரானவை.