நிதின் நபின் என்னுடைய பாஸ்; நான் சாதாரண தொண்டன்.. பிரதமர் மோடி புகழாரம்!
PM Modi Hails Nitin Nabin: நிதின் நபின் என்னுடைய பாஸ்; நான் சாதாரண தொண்டன் என்று பாஜகவின் தேசியத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள நிதின் நபினை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.

பாஜகவின் புதிய தேசியத் தலைவர் நிதின் நபின்
பாஜகவின் தேசியத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள நிதின் நபினை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். நிதின் நபின் தான் பாஜகவில் தன்னுடைய பாஸ் என்றும் தான் ஒரு சாதாரண தொண்டன் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
நிதின் நபின் தான் என்னுடைய பாஸ்
பாஜக தலைமையகத்தில் நடந்த கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, ''கட்சியைப் பொறுத்தவரை, நிதின் நபின் தான் பாஸ், நான் ஒரு கட்சித் தொண்டன். இப்போது மரியாதைக்குரிய நிதின் நபின் ஜி நம் அனைவருக்கும் தலைவர். அவரது பொறுப்பு பாஜகவை நிர்வகிப்பது மட்டுமல்ல, தேசிய ஜனநாயக கூட்டணியின் அனைத்துக் கூட்டணிக் கட்சிகளிடையேயும் ஒருங்கிணைப்பை உறுதி செய்வதும் ஆகும்" என்று பிரதமர் கூறினார்.
பாஜகவின் பாரம்பரியம்
வரவிருக்கும் பத்தாண்டுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர் மோடி, "அடுத்த 25 ஆண்டுகள் மிகவும் முக்கியமானவை. இது வளர்ந்த இந்தியாவைக் கட்டமைக்க வேண்டிய காலகட்டம். அது நிச்சயம் நடக்கும்" என்றார்.
நிதின் நபின் கட்சியின் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்வார் என்று நம்பிக்கை தெரிவித்த அவர், "இந்த முக்கியமான காலகட்டத்தின் தொடக்கத்தில், நமது நிதின் நபின் ஜி பாஜகவின் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்வார்" என்றும் கூறினார்.
ஒவ்வொரு தொண்டருக்கும் பயனளிக்கும்
பாஜகவில் தலைமுறை மாற்றத்தைக் குறிப்பிட்ட பிரதமர், "இன்றைய இளைஞர்களின் மொழியில் சொல்வதானால், நிதின் ஜி ஒரு வகையில் ஒரு மில்லெனியல். நிதின் நபின் தனது குழந்தை பருவத்தில் வானொலியில் இருந்து தகவல்களைப் பெற்ற தலைமுறையைச் சேர்ந்தவர். இப்போது AI-ஐ தீவிரமாகப் பயன்படுத்துபவர்" என்றார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, ''நிதின் இளம் ஆற்றலையும், அமைப்புப் பணிகளில் விரிவான அனுபவத்தையும் ஒருங்கே பெற்றவர். இது நமது கட்சியின் ஒவ்வொரு தொண்டருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்" என்று கூறியுள்ளார்.
பாஜக ஒரு குடும்பம்
மேலும் பாஜகவின் தனித்துவமான செயல்பாடுகள் மற்றும் அதன் பாரம்பரியம் குறித்து பேசிய பிரதமர் மோடி, ''பாஜக ஒரு பாரம்பரியம். பாஜக ஒரு குடும்பம். இங்கே, வெறும் உறுப்பினர் என்பதை விட உறவு அதிகம். பாஜக பதவியால் அல்ல, செயல்முறையால் இயங்கும் ஒரு பாரம்பரியம்.
இங்கே, ஒரு பதவியை வகிப்பது ஒரு ஏற்பாடு, வேலையைச் செய்வது வாழ்நாள் பொறுப்பு. இங்கே, தலைவர்கள் மாறுகிறார்கள், ஆனால் கொள்கைகள் மாறுவதில்லை. தலைமை மாறுகிறது. ஆனால் திசை மாறுவதில்லை'' என்று பெருமிதம் தெரிவித்துள்ளார்.

